மாசி அமாவாசையை முன்னிட்டு திருச்சி காவிரி ஆற்றில் பித்ரு தர்ப்பணம் கொடுக்க குவிந்த பொது மக்கள்!
மாசி அமாவாசை தினத்தையொட்டி திருச்சி காவிரி ஆறு, கொள்ளிடம் ஆறு, அம்மா மண்டபம், அய்யாளம்மன் படித்துறை ஆகிய பகுதிகளில், பொதுமக்கள் இன்று அதிகாலை முதலே புனித நீராடி தங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்து தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.
தை அமாவாசை, ஆடி அமாவாசை, புரட்டாசி மாதத்தில் வரும் மஹாளயா அமாவாசை ஆகிய தினங்களில் இந்துக்கள் தங்களது முன்னோர்களுக்கு திதி கொடுத்து தர்ப்பணம் செய்து வழிபடுவது வழக்கம். இந்நிலையில் இன்று மாசி அமாவாசை என்பதால் காவிரி ஆற்றில் அதிகாலை முதலே பக்தர்கள் புனித நீராடினர். அதனைத் தொடர்ந்து வேத விற்பனர்கள் முன்னிலையில் உயிர் நீத்த தங்கள் முன்னோர்களுக்கு படையல் இட்டு தேங்காய், பழம், மளிகை சாமான் ஆகியவற்றை வைத்து, தண்ணீர் வார்த்து திதி கொடுத்து, பிண்டம் வைத்து, தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.
இவ்வாறு செய்வதால் இறந்து போன தங்களது முன்னோர்கள் தங்களுக்கு துணையாக இருந்து ஆசீர்வதிப்பார்கள் என்ற நம்பிக்கை நிலவுகிறது. மாசி அமாவாசையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் புனித நீராடி திதி கொடுத்து வழிபாடு நடத்தினர். இதனால் ஸ்ரீரங்கம் பகுதியில் மாம்பழச்சாலை முதல் அம்மாமண்டபம் வரை போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.