ஸ்ரீரங்கம் கோவிலில் நீக்கப்பட்ட துப்புரவு ஒப்பந்த பணியாளர்கள் ஶ்ரீரங்கம் ராஜகோபுரம் பகுதியில் துண்டு பிரசுரம் வழங்கி போராட்டம்!
108 வைணவ தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என போற்றப்படுவதுமான ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோவிலுக்கு தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இக் கோயிலின் தூய்மையை பராமரிப்பதற்காக, பத்மாவதி என்ற தனியார் நிறுவனத்திடம் துப்புரவுப் பணிகள் முழுமையாக ஒப்படைக்கப்பட்டன. கடந்த 16 ஆண்டுகளுக்கு மேலாக துப்புரவுப் பணியில் இந்நிறுவனத்தை சேர்ந்த பணியாளர்கள் ஈடுபட்டு வந்தனர். வேலைக்கு சேர்ந்தபோது 2500 ரூபாய் மாத சம்பளம் பெற்ற இவர்களுக்கு, படிப்படியாக சம்பளம் உயர்த்தப்பட்டு தற்போது 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், ‘பத்மாவதி’ தனியார் நிறுவன துப்புரவுப் பணியாளர்கள் 90 பெண்கள் உட்பட 138 பேரை ஜனவரி 31 ஆம் தேதியோடு வேலைக்கு வர வேண்டாம் என்று கோயில் நிர்வாகம் நீக்கிவிட்டது. மேலும் துப்புரவு பணியாளர்கள் பணியில் அமர்த்திய தனியார் நிறுவனமும் அவர்களுக்குரிய சம்பளத்தை முறையாக வழங்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சியடைந்த பணியாளர்கள், தங்கள் குடும்பங்களின் வாழ்வாதாரம் அடியோடு பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தங்களுக்கு கோயிலில் மாற்று பணி வழங்க வேண்டும் என்றும் கோயில் இணை ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோரிடம் தொடர்ந்து மனுக்களை அளித்தனர்.
இம்மனுக்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் இன்று பொதுமக்களிடம் தங்கள் கோரிக்கைகள் சென்றடையும் வண்ணம் ஶ்ரீரங்கம் ராஜகோபுரம் பகுதியில் உள்ள கடை வீதியில் துண்டு பிரசுரம் வழங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.