திருச்சி விமான நிலையத்தில் ₹.50 லட்சம் மதிப்பிலான 797 கிராம் கடத்தல் தங்கம் பறிமுதல் – சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை!
திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு துபாய், மலேசியா, சிங்கப்பூர், இலங்கை உள்பட பல்வேறு வெளி நாடுகளில் இருந்து விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் வரும் பயணிகள் அதிகளவில் தங்கத்தை கடத்தி வருவதும் அதனை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் தொடர்கதையாக இருந்து வருகிறது. இந்நிலையில் சிங்கப்பூரிலிருந்து இண்டிகோ விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வந்த பயணிகளை மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் நடந்து கொண்ட ஒரு ஆண் பயணியை சோதனை செய்ததில் அவர் அணிந்திருந்த காலணியில் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரிய வந்தது. அதில் 50 லட்சத்து 8 ஆயிரத்து 300 ரூபாய் மதிப்புள்ள 797.500 கிராம் தங்கம் இருப்பது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. தங்கத்தை கடத்தி வந்த அந்த பயணியை கைது செய்த அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.