நடிகர் விஜயின் அரசியல் வாழ்க்கை ஆரம்பம்

0

நடிகர் விஜயின் அரசியல் வாழ்க்கை ஆரம்பம்

 

நடிகர் விஜய், அரசியல் களத்தில் இறங்கியுள்ளார். அவரது கட்சிக்கு ‘தமிழக வெற்றி கழகம்’ என பெயரிட்டுள்ளதாகவும் அதிகாரப்பூர்வமாக தனது எக்ஸ் வலைதளத்தில் அறிவித்தார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், விஜய் மக்கள் இயக்கம் பல வருடங்களாக தன்னால் இயன்ற வரையில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களையும், சமூக சேவைகளையும், நிவாரண உதவிகளையும் செய்துவருவது நீங்கள் அனைவரும் அறிந்ததே. இருப்பினும், முழுமையான சமூக, பொருளாதார, அரசியல் சீர்திருத்தங்களை கொண்டுவர ஒரு தன்னார்வ அமைப்பினால் மட்டும் இயலாத காரியம் அதற்கு அரசியல் அதிகாரம் தேவைப்படுகிறது.

தற்போதைய அரசியல் சூழல், நிர்வாக சீர்கேடுகள் மற்றும் ‘ஊழல் மலிந்த அரசியல் கலாசாரம்’ ஒருபுறம் என்றால், நம் மக்களை சாதி மத பேதங்கள் வாயிலாக பிளவுபடுத்த துடிக்கும் ‘பிளவுவாத அரசியல் கலாசாரம்’ மறுபுறம், என்று இருபுறமும் நம் ஒற்றுமைக்கும் முன்னேற்றத்திற்குமான முட்டுக்கட்டைகள் நிறைந்துள்ளன.

ஒரு தன்னலமற்ற, வெளிப்படையான, சாதிமத பேதமற்ற, தொலைநோக்கு சிந்தனை உடைய, லஞ்ச- ஊழலற்ற திறமையான நிர்வாகத்திற்கு வழிவகுக்கக்கூடிய அடிப்படை அரசியல் மாற்றத்திற்காக குறிப்பாக தமிழகத்தில் உள்ள ஒவ்வொருவரும் ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை. அத்தகைய அடிப்படை அரசியல் மாற்றத்தை மக்களின் ஏகோபித்த அபிமானமும், அன்பும் பெற்ற முதன்மையான ஒரு மக்கள்சக்தியால் தான் சாத்தியப்படுத்த முடியும்.

- Advertisement -

அதன்படியே, “தமிழக வெற்றி கழகம்” என்கிற பெயரில் எமது தலைமையிலான அரசியல் கட்சி துவங்கப்பட்டு, இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய எமது கட்சியின் சார்பில் இன்று விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது. வரும் 2026 சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று மக்கள் விரும்பும் அடிப்படை அரசியல் மாற்றத்திற்கு வழிவகுப்பது தான் நமது இலக்கு.

தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் கிடைக்கப் பெற்றபின், வரும் பார்லிமென்ட் தேர்தல் முடிந்தவுடன் தமிழகம் சார்ந்த கொள்கைகளின் வெற்றிக்கும், தமிழக மக்களின் உயர்வுக்குமான எமது கட்சியின் கொள்கைகள், கோட்பாடுகள் கொடி, சின்னம் மற்றும் செயல்திட்டங்களை முன்வைத்து, மக்கள் சந்திப்பு நிகழ்வுகளுடன், தமிழக மக்களுக்கான நம் அரசியல் பயணம் துவங்கும்.

2024ல் போட்டியும் இல்லை, ஆதரவும் இல்லை

வரும் 2024 பார்லிமென்ட் தேர்தலில் நாம் போட்டியிடுவதில்லை என்றும், எந்தக் கட்சிக்கும் நம் ஆதரவு இல்லை என்றும் பொதுக்குழ, மற்றும் செயற்குழுவில் முடிவெடுக்கப்பட்டுள்ளது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். என்னைப் பொறுத்த வரையில் அரசியல் மற்றொரு தொழில் அல்ல; அரசியல் எனக்கு பொழுதுபோக்கு அல்ல; அது என் ஆழமான வேட்கை. அதில் என்னை முழுமையாக ஈடுபடுத்தி கொள்ளவே விரும்புகிறேன்.

என் சார்பில், நான் ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ள இன்னொரு திரைப்படம் சார்ந்த கடமைகளை, கட்சி பணிகளுக்கு இடையூறு இல்லாத வகையில் முடித்துவிட்டு, முழுமையாக, மக்கள் சேவைக்கான அரசியலில் ஈடுபட உள்ளேன். அதுவே தமிழக மக்களுக்கு நான் செய்யும் நன்றி கடனாக கருதுகிறேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

- Advertisement -

- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்