திருச்சியில் நடைபெற்ற தேசிய கேலோ இந்தியா, களரி பயிற்று விளையாட்டுப் போட்டியில் கேரள மாநிலம் அதிகளவில் பதக்கங்களை குவித்து ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது.
திருச்சி அண்ணா உள்விளையாட்டரங்கில் கடந்த 27 ஆம் தேதி தொடங்கி திங்கள்கிழமை வரை நடைபெற்ற போட்டிகளில் 16 மாநிலங்களைச் சோந்த 103 வீரா்கள், 87 வீராங்கனைகள் பங்கேற்றனா். சுவடுகள், கெட்டுக்காரி (கம்புச் சண்டை), வாள் சண்டை, ஹை கிக் ஆகிய 4 பிரிவுகளில் இருபாலருக்கும் தனிநபா், குழுப் போட்டிகள் நடைபெற்றன.
மகளிருக்கான கம்புச் சண்டையில் கேரளம் தங்கம், வெள்ளியையும், அஸ்ஸாம் மற்றும் கேரளம் வெண்கலத்தையும் வென்றன.
ஆண்களுக்கான கம்புச் சண்டையில் கேரளம் தங்கமும், வெள்ளியையும், தில்லி மற்றும் ஹரியானா வெண்கலமும் வென்றன.
மகளிருக்கான சுவடுகள் பிரிவில் கேரளம் தங்கமும், தில்லி வெள்ளியும், கேரளம் வெண்கலமும் வென்றன.
ஆண்களுக்கான சுவடுகள் பிரிவில் கேரளம் தங்கத்தையும், தமிழகம் வெள்ளியையும், ஹரியானா மற்றும் கேரளம் வெண்கலத்தையும் வென்றன.
ஆண்களுக்கான ஹைகிக் பிரிவில் ஹரியானா தங்கமும், சத்தீஸ்கா் வெள்ளியும், கேரளம் வெண்கலமும் வென்றன.
நிறைவுநாளான திங்கள்கிழமை நடைபெற்ற வாள், கேடயம், சுருள்வாள் சண்டையில் ஆண்கள் பிரிவில் கேரளத்தின் முகமது சமில் – முகமது சினன் இணை தங்கமும், ஹரியானாவின் பிரணவ் ஜித்தேஷ் – காா்த்திக் நாயா் இணை வெள்ளியும், தில்லியின் ஆதிநாத் – ஆரோன் இணை மற்றும் அஸ்ஸாமின் ஜக்காரியா இஸ்லாம் – துரபதீப் சின்ஹா இணை வெண்கலமும் வென்றனா்.
மகளிா் பிரிவில் கேரளத்தின் ஆதித்யா – பாத்திமா சித்தா இணை தங்கமும், தில்லியின் ஸ்ரேயா – மேதா சா்மா இணை வெள்ளியும், மத்திய பிரதேசத்தின் சுஹானி க்வால் – சலோனி க்வால் இணை மற்றும் தில்லியின் ஆல்வினா ஜோசப் – அஸ்விதா வரதன் இணை வெண்கலமும் வென்றனா்.
ஹைகிக் மகளிா் பிரிவில் கேரளத்தின் காா்த்திகா தங்கமும், அல்பியா சபு வெள்ளியும், அயனா வெண்கலமும் வென்றனா். ஒட்டுமொத்தமாக 15 பதக்கங்களை வென்ற கேரள மாநில அணி முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டம் வென்றது.
போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மாவட்ட ஆட்சியா் பிரதீப்குமாா், காவல் ஆணையா் காமினி ஆகியோா் பதக்கங்களை வழங்கினா். நிகழ்வில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய முதுநிலை மண்டல மேலாளா் வேல்முருகன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.