இந்திய வெளியுறவு அமைச்சர் – இலங்கை நிதியமைச்சர் சந்திப்பு
கொழும்பு: இலங்கை சென்றுள்ள இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் அந்நாட்டின் நிதியமைச்சர் பசில் ராஜபக்சேவை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இலங்கையின் பொருளாதார நிலை மற்றும் இந்தியாவின் நிதியுதவி குறித்து ஆலோசனை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
நம் அண்டை நாடான இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. அத்தியாவசிய பொருட்களின் விலை பல மடங்கு அதிகரித்து விட்டதால், பொதுமக்கள் வீதிக்கு வந்து போராடும் அளவுக்கு நிலைமை மோசமாகி விட்டது. பெட்ரோல், டீசல் விற்பனை மையங்களில் ராணுவத்தினர் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். இலங்கை இவ்வாறான பொருளாதார நெருக்கடியை சந்தித்துவரும் சூழலில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கைக்கு சென்று, மார்ச் 30 வரை பல்வேறு பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுகிறார்.
அந்த வகையில், இன்று (மார்ச் 28) இலங்கை நிதியமைச்சர் பசில் ராஜபக்சேவை சந்தித்த ஜெய்சங்கர், பொருளாதார நெருக்கடி மற்றும் இந்தியா அளிக்கவுள்ள உதவிகள் குறித்து ஆலோசனை நடத்தியதாக தெரிவித்துள்ளார். முன்னதாக மாலத்தீவுக்கு சென்ற ஜெய்சங்கர், மாலத்தீவு வெளியுறவுத் துறை அமைச்சர் அப்துல்லா ஷாஹித் உடன் பேச்சு நடத்தினார். இருவரும் பிராந்திய பாதுகாப்பு மற்றும் கடல் பகுதிகளில் நிலவும் பிரச்னைகள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.