கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் காலியாக உள்ள 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உதவி பேராசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் – அரசு கல்லூரி ஆசிரியர் மன்ற செயற்குழுவில் தீர்மானம்!
அரசு கல்லூரி ஆசிரியர் மன்றத்தின் மாநில செயற்குழு கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் விடுதியில் இன்று நடைபெற்றது. மாநில தலைவர் குமார் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பொதுச் செயலாளர் சிவராமன், பொருளாளர் சந்திரசேகரன் மற்றும் ஆட்சிக்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதில் கீழ்காணும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன…
புதிய ஓய்வூதிய திட்டத்தை தமிழக அரசு ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
தமிழகத்தில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உதவி பேராசிரியர்கள் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. அதனை தமிழக அரசு உடனடியாக நிரப்ப வேண்டும். ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு கடந்த மாதம் பொது கலந்தாய்வு நடைபெற்றது போல 164 கல்லூரியில் பணியாற்றி வரும் பேராசிரியர்களுக்கு பொது இடம் மாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும். அரசு கல்லூரியில் கௌரவ
விரிவுரையாளர்களுக்கு மாத ஊதியம் 25 ஆயிரத்தில் இருந்து 50 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.