திருச்சி விமான நிலையத்தில் கடத்தல் தங்கம், லேப்டாப், ஐ போன்கள் பறிமுதல்!
திருச்சி விமான நிலையத்திற்கு மலேசியா, சிங்கப்பூர், துபாய், இலங்கை உள்ளிட்ட பல்வேறு வெளி நாடுகளில் இருந்து விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் வரும் பயணிகள் அதிகளவில் தங்கத்தை கடத்தி வருவதும், அதனை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் தொடர்கதையாக இருந்து வருகிறது. இந்நிலையில் திருச்சி விமான நிலையத்திற்கு நேற்று இரவு துபாயில் இருந்து கொழும்பு வழியாக திருச்சி வந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது பயணி ஒருவர் தனது பேண்ட் மற்றும் உள்ளாடைகளில் ரூபாய் 31 லட்சத்து 9 ஆயிரம் மதிப்புள்ள 494 கிராம் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரிய வந்தது. மேலும் அவரிடம் இருந்து ரூபாய் 4 லட்சத்து 45 ஆயிரம் மதிப்புள்ள 3 ஐ ஃபோன்கள், 3 லேப்டாப்கள், 10 வாட்ச் டயல்கள் ஆகியவற்றையும் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து அந்த நபரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.