ஸ்ரீரங்கம் கோவிலில் ஆந்திரா ஐயப்ப பக்தர்களை கோவில் தற்காலிக ஊழியர்கள் தாக்கியதால் பரபரப்பு!
108 வைணவ தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என போற்றப்படும் திருச்சி ஶ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் வைகுண்ட ஏகாதேசி திருவிழாவானது இன்று திருநெடுந்தாண்டகத்துடன் துவங்க உள்ளது. இதனையொட்டி ஏராளமான வெளி மாநில பக்தர்கள் அரங்கனை தரிசனம் செய்ய குவிந்து. வருகின்றனர். இந்நிலையில் ஆந்திர மாநிலம் விஜயவாடாவை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் இன்று சுவாமி தரிசனம் செய்ய கார்த்திகை மண்டபத்தில் வரிசையில் நின்று கொண்டிருந்தனர். அவர்களில் சிலர் கோவிந்தா, கோவிந்தா என அங்கிருந்த உண்டியலில் தாளம் போட்டபடி கோஷமிட்டுள்ளனர். அப்போது அங்கு பாதுகாப்பணியில் ஈடுபட்டிருந்த கோவில் பணியாளர்கள் கோஷம் போட வேண்டாம், தாளம் போட வேண்டாம் எனக் கூறியுள்ளனர். இது தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது கோவில் பணியாளர்கள் ஐயப்ப பக்தர்களை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த மோதல் இரு தரப்பினருக்கும் இடையே கைகலப்பாக மாறியது. இதில் ராம், சியாம் என்ற ஐயப்ப பக்தர்களுக்கு ரத்தம் கொட்டியது. ரத்த காயம் அடைந்த ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை கோபுரம் அருகே தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த ஸ்ரீரங்கம் காவல் உதவி ஆணையர் நிவேதாலட்சுமி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இருதரப்பினரிடமும் விசாரணை நடத்தினர். கார்த்திகை மண்டபத்தில் இந்த மோதல் நடைபெற்றதால் அங்கு சுத்தம் செய்யப்பட்டு புண்ணியதானம் செய்து ஒரு மணி நேரம் காலதாமதமாக பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் கோவில் வளாகத்தில் உள்ள சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பக்தர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீரங்கம் கோவிலிற்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பிற்காக நேற்று (11.12.2023) மாலை கோயிலுக்குள் புறக்காவல் நிலையம் திறக்கப்பட்ட நிலையில் இன்று கோயில் கருவறைக்குள் கலவரம் ஏற்பட்டு ரத்தக் களறியானது குறிப்பிடத்தக்கது.