திருச்சியில் குள்ளநரியை வேட்டையாடி அதன் தோலை விற்க முயன்ற நபர் கைது!
திருச்சி மாவட்டம், வயலூர் அருகே உள்ள இனாம் புலியூர் கிராமத்தில் குள்ளநரி தோல் விற்பனை செய்யப்படுவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து, திருச்சி மண்டல தலைமை வன பாதுகாவலர் சதீஷ் வழிகாட்டுதலின் படியும், திருச்சி மாவட்ட வன அலுவலர் சுமேஷ் சோமன் உத்தரவின் படியும், திருச்சி வனச்சரக அலுவலர் கோபிநாத் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் சேகரித்த தகவல்களின் அடிப்படையில், தனிப்படையினர் இனாம் புலியூர் தெற்கு மேட்டுத்தெருவை சேர்ந்த அய்யர் ( 26 ) என்கிற இளைஞர் வீட்டை சோதனை செய்தனர். அப்போது குள்ளநரியின் தோல் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து அவரிடம் விசாரணை செய்ததில், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக இனாம் புலியூர் கிராம காட்டுப் பகுதியில் வேட்டை நாயை வைத்து குள்ளநரியை வேட்டையாடி மாமிசத்தை சாப்பிட்டு விட்டு, தோலை விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது. தொடர்ந்து அய்யரிடம் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் பெறப்பட்டு கைது செய்யப்பட்டார். பின், இந்திய வன உயிரின பாதுகாப்பு சட்ட பிரிவுகளின் கீழ் கைது செய்து, திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.