திருச்சி ஐஐஐடி நிர்வாகக் குழு தலைவராக அனில் கும்ப்ளே நியமனம்!
திருச்சியில் உள்ள இந்திய தகவல் தொழில்நுட்பக் கழகத்தின் ( ஐஐஐடி ) நிர்வாகக் குழுத் தலைவராக முன்னாள் கிரிக்கெட் வீரர் அனில் கும்ப்ளே நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் கிரிக்கெட் வீரரும், சர்வதேச கிரிக்கெட் கமிட்டியின் முன்னாள் தலைவருமான அனில் கும்ப்ளேவை, திருச்சியில் உள்ள இந்திய தகவல் தொழில்நுட்பக் கழகத்தின் ( ஐஐஐடி ) நிர்வாகக் குழுத் தலைவராக 3 ஆண்டுகளுக்கு மத்திய அரசின் கல்வி அமைச்சகம் நியமித்துள்ளது. ஐஐஐடிக்களிலேயே முதல் முறையாக திருச்சி ஐஐஐடிக்கு தான் சிறந்த விளையாட்டு வீரர், நிர்வாகக் குழுத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
நிறுவனத்தின் கொள்கை முடிவுகளில் நிர்வாகக் குழுத் தலைவரின் ஆலோசனைகள் முக்கிய பங்கு வகிக்கும். இந்நிறுவனத்தின் 14-வது நிர்வாகக் குழுக் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. ஐஐஐடி இயக்குநர் என்.வி.எஸ்.என்.சர்மா தொடங்கி வைத்தார். கூட்டத்துக்கு தலைமை வகித்த நிர்வாகக் குழுத் தலைவர் அனில் கும்ப்ளே, உறுப்பினர்களை சந்தித்து பேசினார்.
தொடர்ந்து, மாணவர்களுடன் கலந்துரையாடிய அவர், ‘கடின உழைப்பும், அர்ப்பணிப்பும் இருந்தால் இலக்குகள் மற்றும் கனவுகள் நிறைவேறும்’ என்றார். பின்னர், வளாகத்தில் மரக்கன்று நட்டு வைத்த அனில் கும்ப்ளே, வளாகத்தை சுற்றிப் பார்த்து, கட்டுமானப் பணிகளுடன் கூடிய பிற வசதிகளைப் பாராட்டினார். இந்நிகழ்ச்சியில், பதிவாளர் ஜி.சீதாராமன் உட்பட பலர் பங்கேற்றனர்.