- Advertisement -

போலி திருமண பத்திரிகை அடித்து ஜாமீன் பெற்ற குட்கா வியாபாரி: ஜாமீனை ரத்து செய்து நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Bismi

போலி திருமண பத்திரிகை அடித்து ஜாமீன் பெற்ற குட்கா வியாபாரி: ஜாமீனை ரத்து செய்து நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

​திருச்சி: தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான் மசாலா பொருட்களை விற்ற வழக்கில் கைதாகி, போலி திருமண அழைப்பிதழைக் காட்டி ஜாமீன் பெற்ற இளைஞரின் ஜாமீனை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் ரத்து செய்ததைத் தொடர்ந்து, அவர் மீண்டும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

​வழக்கின் பின்னணி:

Vagai

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பான் மசாலா மற்றும் குட்கா பொருட்களை விற்பனை செய்ததாக புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் தாலுகா, சோண்டாம்பட்டி பகுதியைச் சேர்ந்த ரத்தினம் என்பவரது மகன் போசங்கு (30) என்பவரை சிறப்பு உதவி ஆய்வாளர் பிரேம் ஆனந்த் கடந்த செப்டம்பர் 23-ம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தார்.

​போலி திருமண பத்திரிகை மூலம் ஜாமீன்:

இதனிடையே, கடந்த அக்டோபர் 15-ம் தேதி தனக்கும் நந்தினி என்பவருக்கும் புதுக்கோட்டை மாவட்டம், நார்த்தாமலை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் அக்டோபர் 25-ம் தேதி திருமணம் நடைபெற உள்ளதாகக் கூறி, போசங்கு தரப்பில் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் திருமண அழைப்பிதழ் தாக்கல் செய்யப்பட்டு ஜாமீன் பெறப்பட்டது.

​போலீஸார் விசாரணையில் அம்பலம்:

- Advertisement -

இந்தத் திருமணம் குறித்து சந்தேகமடைந்த துவாக்குடி காவல் நிலைய உதவி ஆய்வாளர் நாகராஜ் மற்றும் நீதிமன்றக் காவலர் பாண்டியராஜன் ஆகியோர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின:

​திருச்சி விமான நிலையப் பகுதியில் உள்ள ஒரு பிரபல அச்சகத்தில் வெறும் 10 திருமண அழைப்பிதழ்களை மட்டும் அச்சடித்து, திருமணம் நடைபெற உள்ளதாக வழக்கறிஞர்கள் மூலம் நீதிமன்றத்தில் பொய்யான தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

​புதுக்கோட்டை தேவஸ்தான கோவில்களின் செயல் அலுவலர் மற்றும் உதவி ஆணையர் ஆகியோரிடம் விசாரணை நடத்தியதில், அக்டோபர் 25-ம் தேதி நார்த்தாமலை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் போசங்குவிற்கு எந்தவொரு திருமணமும் நடைபெறவில்லை என்பது கோவில் பதிவேடுகள் மூலம் உறுதி செய்யப்பட்டு, அதற்கான அறிக்கையும் பெறப்பட்டது.

​ஜாமீன் ரத்து மற்றும் மீண்டும் சிறை:

போலியான திருமண அழைப்பிதழைச் சமர்ப்பித்து நீதிமன்றத்தை ஏமாற்றி ஜாமீன் பெற்ற போசங்குவின் ஜாமீனை ரத்து செய்யக் கோரி, துவாக்குடி சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ் திருச்சி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

​இந்த மனுவை விசாரித்த மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி, கடந்த 25-ம் தேதி போசங்குவிற்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்து உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து, இன்று (நவ. 27) காலை 10.05 மணிக்கு போசங்குவை துவாக்குடி போலீஸார் மீண்டும் கைது செய்து, திருச்சி 6-வது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதை அடுத்து, போசங்கு மீண்டும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

​திருமண அழைப்பிதழ் போலியானது என போலீஸார் நடத்திய விசாரணையின் அடிப்படையில், திருச்சி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தால் ஜாமீன் ரத்து செய்யப்பட்டு குற்றம் சாட்டப்பட்டவர் மீண்டும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

​#TrichyNews #Thiruverumbur #Thuvakudi #GutkhaCase #BailCancelled #FakeWeddingInvitation #TNPolice #TamilNaduNews #TrichyCourt

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்