திருச்சி பாலக்கரையில் பதற்றம்! இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்யக் கோரி முற்றுகைப் போராட்டம் – 300-க்கும் மேற்பட்டோர் கைது!
திருச்சி பாலக்கரையில் பதற்றம்! இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்யக் கோரி முற்றுகைப் போராட்டம் – 300-க்கும் மேற்பட்டோர் கைது!

திருச்சி:

மகாத்மா காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடும் இஸ்லாமிய ஆயுள் சிறைவாசிகளை உடனடியாக விடுதலை செய்யக் கோரியும் அல்லது பரோல் வழங்கக் கோரியும், தமிழக தலைமைச் செயலாளரைக் கண்டித்து திருச்சியில் மாபெரும் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.
தமிழக மக்கள் ஜனநாயக கட்சி (TMJK) சார்பில் அழைப்பு விடுக்கப்பட்ட திருச்சி மத்திய சிறை முற்றுகைப் போராட்டத்தின் ஒரு பகுதியாக, திருச்சி பாலக்கரை ரவுண்டானா அருகே கட்சித் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் திரண்டனர்.

திருச்சி மாவட்ட தலைவர் மி. ராயல் சித்திக் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், நீண்ட காலமாக சிறையில் இருக்கும் சிறைவாசிகளை உடனே விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
போராட்டக்காரர்கள் மத்திய சிறையை நோக்கி பேரணியாகச் செல்ல முயன்றபோது, காவல்துறையினர் அவர்களைத் தடுத்து நிறுத்தினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் தள்ளுமுள்ளு ஏற்பட்டு பரபரப்பும் பதற்றமும் நிலவியது.
அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் மற்றும் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட முயன்றதாகக் கூறி, மாவட்ட தலைவர் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இதனால் பாலக்கரை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. Tvk கட்சியை சேர்ந்த நிர்வாகிகளும் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது
செய்தி- அன்வர் தீன்

#Trichy #Palakkarai #TMJK #PrisonersRelease #ProtestNews #TrichyNews #BreakingNews #TamilNaduNews #PoliticalNews





Comments are closed.