திருமயத்தில் அண்ணாவின் 118-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்! விராலிமலை இடைத்தேர்தலில் அதிமுக வெற்றிக்காக களப்பணியாற்ற உறுதி
திருமயத்தில் அண்ணாவின் 118-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்! விராலிமலை இடைத்தேர்தலில் அதிமுக வெற்றிக்காக களப்பணியாற்ற உறுதி
திருமயம்:
புதுக்கோட்டை தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 118-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் திருமயத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு தெற்கு மாவட்டச் செயலாளர் ஏ.எல். ராமு தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் ராதாகிருஷ்ணன் மற்றும் வடக்கு மாவட்டச் செயலாளர் பழனிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருமயம் தெற்கு ஒன்றியச் செயலாளர் சுப்பிரமணியன் வரவேற்புரையாற்றி, மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள், மகளிர் அணியினர் மற்றும் கழகத் தொண்டர்களை வரவேற்றார்.
திமுக, தவெக மீது கடும் விமர்சனம்:

கூட்டத்தில் மாநில இளைஞரணி துணைச் செயலாளர் குமரேசன், அரிமளம் ஒன்றிய முன்னாள் சேர்மன் கணேசன், நடிகர் சுப்புராஜ், லட்சுமணன், மாவட்டப் பொருளாளர் அம்பி, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் சிவகாமி, குளத்தூர் ராஜு உள்ளிட்ட பல நிர்வாகிகள் சிறப்புரையாற்றினர்.
மேடையில் பேசிய நிர்வாகிகள், “அதிமுக ஆட்சிக் காலத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி கட்டுக்குள் இருந்தது. ஆனால், தற்போதைய சூழலில் சர்க்கரை, மளிகைப் பொருட்கள், மின்கட்டணம் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலைகள் கடுமையாக உயர்ந்து பொதுமக்களைப் பெரிதும் பாதித்துள்ளது. மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. சமீபத்தில் தவெக-விற்கு வாக்களித்த மக்கள், எதற்காக அவர்களுக்கு வாக்களித்தோம் என்று இப்போது சிந்தித்து உணரத் தொடங்கியுள்ளனர். கழகத் தொண்டர்கள் யாரும் சோர்வடையாமல் தீவிர களப்பணியாற்றினால் மீண்டும் தமிழகத்தில் அதிமுக ஆட்சி மலர்வது உறுதி” எனத் தெரிவித்தனர்.
இடைத்தேர்தல் வெற்றிக்கு அழைப்பு:
விராலிமலை தொகுதி இடைத்தேர்தலில் பொதுச்செயலாளர் அறிவிக்கும் வேட்பாளரை அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட்டு மகத்தான வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றும், கட்சிக்கு துரோகம் இழைப்பவர்களுக்குத் தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.
நிகழ்வின் நிறைவாக கோட்டை வெங்கட் நன்றியுரை ஆற்றினார். இதில் திருமயம் மற்றும் விராலிமலை சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகள், மகளிர் அணியினர் மற்றும் பொதுமக்கள் என 1,600-க்கும் மேற்பட்டோர் திரளாகக் கலந்துகொண்டனர்.
#AIADMK #Thirumayam #ArignarAnna118 #ViralimalaiByElection #Pudukkottai #TNPolitics #ADMKPublicMeeting





Comments are closed.