பிசியோதெரபி துறையை பற்றி அவதூறு பரப்பினால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் – தமிழ்நாடு பிரைமரி ஹெல்த் செண்டர் பிசியோதெரபி சங்க நிர்வாகிகள் பேட்டி!
நடிப்பு அரக்கன், வாட்டர் மிலன் ஸ்டார், சின்ன சிவாஜி என்று தன்னைத் தானே அழைத்துக் கொண்டு ரீல்ஸ்கள் போட்டு பிரபலமானவர் மதுரையை சேர்ந்த திவாகரன். எந்த அளவு தனது வெகுளித்தனத்தால் பிரபலம் ஆனாரோ, அது வெகுளித்தனம் அல்ல விளம்பரத்திற்காக அவர் செய்யும் நாடகம் என்று பலரும் தற்போது youtube களில் வீடியோக்கள் வெளியிட்டு வருகின்றனர். நடிகர்கள் பற்றி திவாகரன் “அவங்க நடிக்கிறது எல்லாம் நடிப்பா “பெரிய நடிகர்கள் எல்லாம் என் நடிப்பை youtube-பில் பார்த்து தான் திரையில் நடிக்கிறார்கள்” என்று அளவுக்கு மீறி வசனங்களை பேசி வருகிறார். அத்துடன் வார்த்தைக்கு வார்த்தை நான் பிசியோதெரபிஸ்ட் டாக்டர் என்று சொல்லிக் கொள்ளும் திவாகரனுக்கு தற்போது பிசியோதெரபிஸ்ட் டாக்டர்களே எச்சரிக்கை மணி அடித்துள்ளனர்.
இதுகுறித்து தமிழ்நாடு பிரைமரி ஹெல்த் சென்டர் பிசியோதெரபி சங்கத்தின் மாநில பொது செயலாளர் வீரசிவா மற்றும்
மாநில ஒருங்கிணைப்பாளர் இளையராஜா ஆகியோர் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்,….
கடந்த சில நாட்களாக பிசியோதெரபி மருத்துவர் திவாகரை பற்றியும் அவரை சார்ந்த பிசியோதெரபி துறையை பற்றியும் சமூக வலைதளங்களில் சிலர் தவறான கருத்துக்களை பரப்பி வருகிறார்கள். இதனால் பிசியோதெரபி மருத்துவர்கள் பலர் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்கள். திவாகர் செய்வது சரி, தவறு என்று நாங்கள் கூறவில்லை. ஒரு தனி மனிதனை பற்றி யார் வேண்டுமானாலும் கருத்துக்களை பரிமாறலாம். அதற்கு நாங்கள் தடை விதிக்க முடியாது. ஆனால் அவர் சார்ந்த துறையை பற்றி பேசுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
பிசியோதெரபி துறையைப் பற்றி தெரிந்த படித்த முட்டாள்களும், தெரியாதவர்களும் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து அவதூறு கருத்துக்களை பரப்பி வருகிறார்கள். இவற்றை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லை என்றால் மத்திய அரசு தெரிவித்துள்ள சட்டத்தின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
குறிப்பாக நடிகர் பயில்வான் ரங்கநாதன் ஒரு மூத்த பத்திரிக்கையாளர் மற்றும் சிறந்த நடிகர். அவர் பிசியோதெரபி துறையை பற்றி அவதூறான கருத்துக்களை பதிவிட்டது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதை இத்துடன் அவர் நிறுத்திக் கொள்ள வேண்டும்.
பிசியோதெரபி துறை என்பது மிகவும் புனிதமான துறையாக கருதி நாங்கள் பணியாற்றி வருகிறோம். ஒரு சிலர் தனிப்பட்ட முறையில் செய்யக்கூடிய செயல்களுக்கு ஒட்டுமொத்த துறையை அசிங்கப்படுத்தும் விதமாக அவதூறு கருத்துக்களை பரப்புவது மிகவும் தவறு.
பிசியோதெரபி படித்தவர்கள் பல கட்ட போராட்டங்களை நடத்திய பிறகு, பிசியோதெரபி மருத்துவர் என்று அழைப்பதற்கு மத்திய அரசு மற்றும் மாநில அரசு அனுமதி அளித்துள்ளது. அதே சமயம் பிசியோதெரபி துறையை பற்றி தவறான கருத்துக்களை பரப்பினால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கவும் மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
இத்தகைய பல கட்ட போராட்டங்களைக் கடந்து நாங்கள் பணி செய்து வருகிறோம். இந்நிலையில் பிசியோதெரபித்துறையை பற்றி சமூக வலைதளங்களில் தவறான கருத்துக்களை பரப்புவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்தனர்.
Comments are closed.