திருச்சி மாவட்டம் நாகமங்கலம் சந்தனத்தான் குறிச்சியில் உள்ள கோதண்டராமர் திருக்கோவிலில் மூன்றாம் ஆண்டு 108 திருவிளக்கு பூஜை நேற்று மாலை நடைபெற்றது. திருவிளக்கு பூஜையை முன்னிட்டு யாகங்கள் வளர்க்கப்பட்டு கோதண்ட ராமருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்ட பெண்களுக்கு அறங்காவலர் சார்பில் தாம்பூல தட்டு, மஞ்சள் கயிறு, குங்குமம், விளக்கேற்ற எண்ணெய், திரி உள்ளிட்டவை வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நடந்த திருவிளக்கு பூஜையில் குழந்தை பாக்கியம் வேண்டியும், உலக மக்கள் நோய் நொடி இல்லாமல் வாழவும், மாணவ மாணவிகள் கல்வி அறிவு பெறவும், திருமண தடை நீங்கவும், கடன் தொல்லை நீங்கவும், செல்வம் செழிக்க வேண்டியும் பெண்கள் பிரார்த்தனை செய்து திருவிளக்கு ஏற்றி வைத்து பூஜை செய்தனர். இந்த 108 திருவிளக்கு பூஜையில் அப்பகுதியை சேர்ந்த பெண்கள் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி பூக்களால் அர்ச்சனை செய்து தீபாராதனை காண்பித்து வழிபட்டனர். தொடர்ந்து பூஜையில் பங்கேற்ற பெண்கள் மற்றும் கிராம மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் குண்டும் குழியுமாக உள்ள இக்கோவிலுக்கு செல்லும் பாதையை சீரமைத்து தரக்கோரியும், கோவிலுக்கு மின் இனைப்பு வழங்க கோரியும் கிராம மக்கள் தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். திருவிளக்கு பூஜைக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகியும், பூசாரியுமான பாண்டியன் செய்திருந்தார்.