தரைக்கடை மற்றும் தள்ளுவண்டி வியாபாரிகளின் கடைகளை அப்புறப்படுத்தும் திருச்சி மாநகராட்சி கோ அபிஷேகபுரம் கோட்ட நிர்வாகத்தை கண்டித்தும், அடையாள அட்டை பெற்று பல ஆண்டுகளாக திருச்சி அரசு மருத்துவமனை முன்பு கடை போட்டு பிழைப்பு நடத்துபவர்களுக்கு கடை நடத்த அனுமதி வழங்கிட கோரிக்கை விடுத்தும் தரைக்கடை தள்ளுவண்டி வியாபாரிகள் சங்கம் சி.ஐ.டி.யு. சார்பில் திருச்சி கோ அபிஷேகபுரம் கோட்ட அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடந்தது. தரைக்கடை சங்க மாவட்ட தலைவர் கணேசன் தலைமை தாங்கினார் சி.ஐ.டி.யு. மாவட்டச் செயலாளர் ரெங்கராஜன் போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.இந்தப் போராட்டத்தில் வியாபாரிகள் சங்க மாவட்ட செயலாளர் செல்வி மாவட்ட நிர்வாகிகள் புஷ்பாகரன், அப்துல்லா, மணிகண்டன், சேட் மைதீன், சுரேஷ், கோவிந்தன், பசுபதி ராஜ் உள்ளிட்ட தரைக்கடை தள்ளுவண்டி வியாபாரிகள் திரளாக கலந்து கொண்டு மாநகராட்சியை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டம் நடத்திய பின் அவர்கள் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் நின்றிருந்த போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து திருச்சி மாவட்ட தள்ளுவண்டி தர கடை மற்றும் மார்க்கெட் வியாபாரிகள் சங்கத்தின் சிஐடியு மாவட்ட தலைவர் கணேசன் கூறுகையில்
தரைக் கடை வைத்திருக்கும் வியாபாரிகளை நடைபாதை என்ற காரணத்தைக் கூறி அப்புறப்படுத்துகிறார்கள்.வியாபாரிகளிடம் அரசு வழங்கிய அடையாள அட்டை உள்ளது. எனவே வியாபாரிகளை மதித்து மாநகராட்சி நடக்க வேண்டும்.வியாபாரிகளின் கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ளாவிட்டால் தொடர் போராட்டம் நடத்துவோம் என்று கூறினார்.