தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் இன்று தொடங்கியுள்ள நிலையில் திருச்சியில் காலை முதலே வெயில் கொளுத்தி வருகிறது.
கோடை வெயிலின் உச்சமாக கருதப்படும் அக்னி நட்சத்திரம் இன்று முதல் துவங்கி 28ம் தேதி வரை நீடிக்கிறது. இந்நிலையில் அக்னி நட்சத்திரம் தொடங்கிய முதல் நாளே திருச்சியில் வெயில் வறுத்து எடுக்கிறது. கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் அதிகம் இருப்பதாகவும், பகல் நேரங்களில் வெளியே நடமாட முடியாத சூழல் இருப்பதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால், மக்கள் வீட்டை விட்டு வெளியே வரமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து உடலை பாதுகாக்க ஆரோக்கியமான இயற்கை உணவுகளை சாப்பிடுவது அவசியம் என
மருத்துவர்கள் பலர் அறிவுறுத்துகின்றனர்.
வெயில் காலத்தில் வெப்பநிலை அதிகமாக இருப்பதால் உடலில் இருந்து வியர்வை மூலம் நீர் போக்கு வெளியேறி ஹீட் ஸ்ட்ரோக், ஹீட் கிரம்ப்ஸ் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர், அத்துடன் வெளியில் செல்லும் போது பருத்தி ஆடைகளை அணிவது நல்லது என தெரிவிக்கின்றனர். வெயிலில் செல்லும் போது மயக்கம், அஜீரணம் மற்றும் சரும பிரச்சனைகள் ஏற்படக்கூடும் என்பதால் அதிகளவு தண்ணீர், மோர், இளநீர் மற்றும் நீர் சத்துள்ள காய்கறிகள், பழங்கள் உள்ளிட்டவற்றை உட்கொள்ள வேண்டும் , மதுபானங்கள் குடிப்பதை குறைத்துக் கொள்ள வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.