ஆசிரியரை மாணவன் தகாத வார்த்தையால் பேசி தாக்க முயன்ற சம்பவம் கண்டிக்கத்தக்கது என்று சமூக ஆர்வலர் பா.ஜான் ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.
சமூக ஆர்வலரும், திருச்சி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவருமான ஜான் ராஜ்குமார் கூறுகையில், வேலூர் மாவட்டம் மாதனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியரை மாணவன் கடுமையாக தகாத வார்த்தையால் பேசி தாக்க முற்பட்ட சம்பவம் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.
இதை பார்க்கும்போது நெஞ்சம் பதைபதைக்கிறது. ஆனால் ஒரு ஆசிரியர் மௌனமாக நிற்கிறார். அமர்ந்திருக்கிறார். அவரை கெட்ட வார்த்தையால் பேசி அருவருக்கத்தக்க வார்த்தைகளை பேசி அச்சில் ஏற்ற முடியாத அருவருப்பான வார்த்தைகளில் அவரை திட்டி ஒரு மாணவன் அடிக்க கை ஓங்குகிறார் என்றால் இந்த சமுதாயம், மாணவர் சமுதாயம் எந்த நிலைக்கு போய்க் கொண்டிருக்கிறது என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.
ஒரு தமிழ் மாணவன் ஆசிரியரை தாக்க முற்படுகிறான் என்று சொன்னால் இந்த நாட்டில் ஆசிரியர்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கிறது. கல்வியை அவர்கள் நமக்கு கற்றுக் கொடுக்கத் தான் வந்து இருக்கிறார்கள் ஆனால் அவர்கள் அடி வாங்க வரவில்லை இழிவாக கேவலமாக தகாத வார்த்தைகளை ஒரு மாணவன் பேசுகிறார் என்று சொன்னால் ஒருவேளை அந்த ஊர் ரவுடிக்கும்பல் உள்ள ஊரா. அல்லது அந்த காலத்திலே கல்லூரி மாணவர்கள் அரசியல் செய்வார்கள் தேர்தலில் நிற்பார்கள். அரசியல் எல்லாம் செய்வாங்க. ஆனால் பள்ளியில் படிக்க கூடிய ஒரு மாணவன் ஆசிரியரை தாக்கி பேசிய சம்பவம் இதைவிட வேறு எங்குமே இருக்காது.
அரசு, பள்ளிக் கல்வித் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்படிப்பட்ட மாணவர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். அவனை அந்த பள்ளியை விட்டு அப்புறப்படுத்த வேண்டும் வேறு எங்கு சேர்க்க கூடாது. சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என்பது எனது கோரிக்கை வேண்டுகோளாக இருக்கிறது. இதனை வன்மையாக கண்டிக்கிறேன். இது கல்லூரியில் நடக்கக்கூடிய சம்பவம் இன்றைக்கு ஒரு மேல்நிலைப் பள்ளியில் நடக்கும் சொன்னால் இதற்கு உடனடியாக தமிழக அரசும் காவல்துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு ஜான் ராஜ் குமார் தெரிவித்துள்ளார்.