மன உளைச்சலுக்கு யார் காரணம், பாட்டாளி மக்கள் கட்சி தொண்டர்களா? பொறுப்பாளர்களா? – அருள் எம்.எல்.ஏ
ராமதாஸ் தலைமையில் பா.ம.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம்!
மன உளைச்சலுக்கு யார் காரணம், பாட்டாளி மக்கள் கட்சி தொண்டர்களா?
பொறுப்பாளர்களா? – அருள் எம்.எல்.ஏ
ராமதாஸ் தலைமையில் பா.ம.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம்!

2026 சட்டமன்ற தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் தயாராகி வருகிறது. யாருடன் கூட்டணி அமைப்பது, எத்தனை இடங்களை கேட்பது என்று தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் சேலம் 5 ரோட்டில் உள்ள ரத்தினவேல் ஜெயக்குமார் திருமண மண்டபத்தில் இன்று டாக்டர் ராமதாஸ் தலைமையில் பா.ம.க. செயற்குழு,பொதுக்குழு கூட்டம் தொடங்கியது. இதில் செயல்தலைவர் ஸ்ரீகாந்திமதி, கவுரவ தலைவர் ஜி.கே.மணி, வன்னியர் சங்க தலைவர் பு.தா.அருள்மொழி, பொதுச்செயலாளர் முரளிசங்கர், பொருளாளர் மன்சூர், மாநில இளைஞர் சங்க தலைவர் தமிழ்குமரன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் 650 பேர், பொதுக்குழு உறுப்பினர்கள் 4 ஆயிரத்து300 பேர் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் கூட்டணி குறித்து முடிவு எடுக்க டாக்டர் ராமதாசுக்கு அதிகாரம் அளித்து தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. பின்னர் பொதுக்குழுவில் வருகிற 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் பா.ம.க. யாருடன் கூட்டணி என்பது குறித்து டாக்டர் ராமதாஸ் அறிவிக்கிறார். இதனால் இந்த கூட்டம் அரசியல் கட்சியினர் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. முன்னதாக அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் மட்டுமே மண்டபத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். மேலும் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களுக்கு காலை உணவு மற்றும் மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. மேலும் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு அவர்களது இருக்கையில் டாக்டர் ராமதாஸ் படத்துடன் கூடிய பையில் தண்ணீர் பாட்டில் மற்றும் பிஸ்கட் பாக்கெட்டுகள், மிக்சர், கடலை உருண்டை வைக்கப்பட்டு இருந்தது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள டாக்டர் ராமதாஸ் நேற்று மதியம் சேலம் வந்தார். அவருக்கு கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும் செயற்குழு,பொதுக்குழு நடந்த மண்டபம் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. மேலும் சேலம் மாநகரம் முழுவதும் பல்வேறு இடங்களில் பா.ம.க. கட்சி கொடிகள், தோரணங்கள் கட்டப்பட்டு இருந்தது. இதற்கான ஏற்பாடுகளை பா.ம.க. மாநில இணை பொதுச்செயலாளர் இரா.அருள் எம்.எல்.ஏ., மாவட்ட செயலாளர் கதிர்ராசரத்தினம் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்து இருந்தனர்.
பா.ம.க. செயற்குழு கூட்டத்தில் அருள் எம்.எல்.ஏ பேசியதாவது:-
ஒரு கட்சியினுடைய தலைவர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணம் நமது பாட்டாளி மக்கள் கட்சி. ஒரு தலைவர் எப்படி இருக்கக் கூடாது என்பதற்கும் உதாரணமாக இருந்ததும் நம்முடைய பாட்டாளி மக்கள் கட்சி. அப்படின்னா மருத்துவர் ராமதாஸ் என்ற ஒரு தலைவர் இந்த நாட்டை எப்படி நேசித்தார் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். 46 ஆண்டு காலம் அரை நூற்றாண்டுகள் தன்னுடைய வாழ்வை இந்த மக்களுக்காக அர்ப்பணித்து ஒரு போராளியாக மட்டுமே வாழ்ந்து கொண்டிருப்பவர்.அப்படிப்பட்ட தலைவர் இன்றைக்கு கடந்த 2, 3 ஆண்டுகளில் அவருக்கு ஏற்பட்டிருக்கின்ற மன உளைச்சல் சாதாரண மன உளைச்சலா? நான் உங்களிடத்தில் கேட்கிறேன். இந்த மன உளைச்சலுக்கு யார் காரணம். பாட்டாளி மக்கள் கட்சி தொண்டர்களா? பொறுப்பாளர்களா? யார் காரணம், யாருமே இல்லை.
ராமதாஸ் அவர்கள் முடிவெடுக்கும் வரையிலே பாட்டாளி மக்கள் கட்சி தமிழ்நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக இருந்தது. மருத்துவர் ராமதாஸ் என்ற ஒரு பெயரை சொன்னால் எந்த ஒரு தலைவரும் ராமதாஸ் சொல்வதை மட்டுமே செய்தாக வேண்டிய கட்டாய நிலையை உருவாக்கி வைத்திருந்தார். இன்றைக்கு சிறு அளவிற்கு மாற்றுவதற்கு ஒரு கூட்டம் முயற்சிக்கிறது. அதற்கு யார் காரணம். மருத்துவர் ராமதாஸ் அவர்களால் அடையாளம் காட்டப்பட்டு 36 வயதிலேயே மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் பதவி கொடுத்து இந்திய துணை கண்டத்தில் பல சாதனைகளை செய்ய வேண்டும் என்று வழிகாட்டி, எம்.பி. பதவி உள்ளிட்ட பல பதவிகளை கொடுத்து அழகுபார்த்த ராமதாஸ். அவர்களை இந்த 3 ஆண்டுகளில் நீங்கள் படுத்திக் கொண்டு இருக்கின்ற பாடு என்பது, நேற்று முன்தினம் ஒரு காணொளி வந்ததே தமிழ்நாட்டில் இருக்கின்ற பெண்கள் கதறி அழுதார்களே. ஆனால் ராமதாஸ் அவர்களால் பெற்றெடுக்கப்பட்ட ஒரு குழந்தை மகிழ்ந்து கொண்டிருக்கிறது. எவ்வளவு பெரிய வேதனை. நியாயமா? நான் கேட்கிறேன். 18 முறை நான் சிறைக்கு சென்றிருக்கிறேன். குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு இருக்கிறேன். ஆனால் சிறையை காணாத உங்களுக்கு எத்தனை எத்தனை பதவிகளை வாரி கொடுத்தவர் யார்? அடுத்தது நமக்கு வழிகாட்டுபவர்கள் நீங்கள் என்று நினைத்து உங்களை அழைத்தோம். ஆனால் அனைவரின் தலையிலும் மண்ணை போட்டு விட்டீர்களே. நியாயமா? தர்மமா? உங்களிடத்தில் கேட்கிறேன். வயிறு அய்யாவுக்கு மட்டும் எரியவில்லை தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு அப்பாவுக்கும், ஒவ்வொரு அம்மாவுக்கும் வயிறு எரிகிறது. நீங்கள் இந்த 26-ல் அமைக்கின்ற கூட்டணி நீங்கள் சொல்கின்றவர் தான் இந்த நாட்டின் முதலமைச்சராக வருவார். யார் தலையில் எழுதியுள்ளது என்று எங்களுக்கு தெரியவில்லை. முதலமைச்சராக யார் வருவார் என்பதை முடிவு செய்பவர் ராமதாஸ் என்று பேசினார்.


Comments are closed.