சர்வதேச ஹாக்கி மைதானத்தை திறந்து வைத்தார் உதயநிதி!
சர்வதேச ஹாக்கி மைதானத்தை திறந்து வைத்தார் உதயநிதி!

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 2 நாள் பயணமாக நேற்று கோவை வந்தார். நேற்று மாலை திருப்பூர் மாவட்டம் காரணம்பேட்டையில் நடந்த மகளிர் மாநாட்டில் பங்கேற்று பேசினார். இன்று காலை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வடகோவையில் உள்ள தமிழ்நாடு வனக்கல்லூரியில் நடைபெற்ற தமிழ்நாடு வனப்படை நவீனமயமாக்கல் மற்றும் ஆயுதங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.அப்போது தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக கோவை மாவட்டம் சிறுமுகை அடுத்த பெத்திக்குட்டையில் ரூ.19½ கோடியில் கட்டப்பட்டுள்ள வனவிலங்குகள் இடமாற்றம் மற்றும் சிகிச்சை மையம், சாடிவயல் யானைகள் முகாம், தமிழ்நாடு வனத்துறை ஆவணக் காப்பகம் சேமிப்பகம் ஆகியவற்றை காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சி முடிந்ததும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி பள்ளி மைதானத்தில் நடந்த அரசு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது அங்கு ரூ.9.67 கோடியில் கட்டப்பட்டுள்ள அதிநவீன சர்வதேச ஹாக்கி மைதானத்தை, தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.
சுமார் 6,500 சதுர மீட்டர் பரப்பளவில் சர்வதேச தரத்திற்கு இணையாக இந்த மைதானம் உருவாக்கப்பட்டுள்ளது.இரவு நேரங்களிலும் போட்டிகளை நடத்தும் வகையில், தலா 500 வாட்ஸ் திறன் கொண்ட 20 எல்.இ.டி (LED) விளக்குகளுடன் கூடிய 6 பிரம்மாண்ட மின்கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.மைதானத்தைச் சுற்றி உறுதியான கம்பிவேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு தனித்தனியாக உடை மாற்றும் அறைகள், ஓய்வறைகள் மற்றும் நவீன கழிப்பறை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.மைதானத்தைத் திறந்து வைத்த பின், அங்கு சிறிது நேரம் ஆக்கி விளையாடி துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வீரர்களை உற்சாகப்படுத்தினார். விளையாட்டுத் துறைக்கு தமிழக அரசு அளிக்கும் முக்கியத்துவத்தை இந்த மைதானம் பறைசாற்றுவதாக விளையாட்டு ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.


Comments are closed.