திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு, 78 ஆண்டுகளாக சாலை வசதி இல்லாத மருத்துவர் காலனி மக்கள் மனு அளிக்கும் போராட்டம்!
திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு, 78 ஆண்டுகளாக சாலை வசதி இல்லாத மருத்துவர் காலனி மக்கள் மனு அளிக்கும் போராட்டம்!
திருச்சி (ஜூலை 13):
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று தமிழர் தேசம் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து நடத்திய திடீர் போராட்டத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

விடுதலை பெற்றும் விடியாத கிராமம்:
திருச்சி மாவட்டம், மணப்பாறை வட்டம், வையம்பட்டி ஒன்றியத்திற்குட்பட்ட இனாம் புதுவாடி ஊராட்சி, புதுவாடி மருத்துவர் காலனி பகுதிக்கு நாடு சுதந்திரமடைந்து இத்தனை ஆண்டுகள் ஆகியும் இதுவரை அடிப்படை சாலை வசதி செய்து தரப்படவில்லை என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மற்றும் வட்டார வளர்ச்சி அதிகாரியிடம் (BDO) பொதுமக்கள் பலமுறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

சாலை வசதி கோரி முறையிட்டபோது, காவல்துறை அதிகாரி ஒருவர், “ஆதிக்க சமூகத்தினரின் காலில் விழுந்தால் தான் உங்களுக்கு சாலை வசதி கிடைக்கும்” என அலட்சியமாகவும், சாதிய விவேசனத்தோடும் பேசியதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தும், உடனடியாக நிலத்தை கையகப்படுத்தி சாலை அமைத்துத் தர வலியுறுத்தியும், திருச்சி தெற்கு மாவட்ட தமிழர் தேசம் கட்சி சார்பில் இன்று ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கும் போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்திற்கு கட்சியின் மாநில பொதுச் செயலாளர் தளவாய் ராஜேஷ் தலைமை தாங்கினார். இளைஞர் அணி மாநில செயலாளர் துரை குணசேகரன் முன்னிலை வகிக்க, மாவட்ட செயலாளர் துரைராஜ் அம்பலம் அனைவரையும் வரவேற்றார். தங்களுக்கு சாலை வசதி வேண்டும் என்ற கோரிக்கையுடன் பள்ளி குழந்தைகளை கைகளில் ஏந்தியபடி மருத்துவர் காலனி மக்கள் திரளாக இதில் கலந்து கொண்டனர்.
முதலில் ஆட்சியர் அலுவலகத்திற்குள் ஊர்வலமாகச் சென்று மனு அளிக்க பொதுமக்கள் திட்டமிட்டிருந்தனர். ஆனால், கைகளில் பேனர் ஏந்திச் செல்ல காவல்துறை அனுமதி மறுத்ததால், அங்கு வந்தவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, கண்டன கோஷங்களை எழுப்பி பொதுமக்கள் மற்றும் கட்சியினர் அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், அதிகாரிகளிடம் கோரிக்கை மனுவை அளித்துவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.
#Trichy #TrichyCollectorate #Protest #Vaiyampatti #RoadFacility #TamilarDesamKatchi #PublicIssue #Manapparai #TamilNaduNews #BreakingNews





Comments are closed.