சோகம் சமயபுரம் மாரியம்மன் கோவில் மண்டப மேற்கூரை இடிந்து விழுந்து இளம்பெண் பலி – கும்பாபிஷேகம் முடிந்த 4 ஆண்டுகளில் விபத்து!
சமயபுரம் | மார்ச் 29, 2026
திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழாவிற்காக வந்த பக்தர்களில், மண்டப மேற்கூரை இடிந்து விழுந்ததில் தஞ்சையைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கும்பாபிஷேகம் நடந்து 4 ஆண்டுகளே ஆன நிலையில் இந்த விபத்து நேரிட்டது பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதிகாலையில் நடந்த கோர விபத்து
சக்தி தலங்களில் முதன்மையான சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தற்போது பிரசித்தி பெற்ற பூச்சொரிதல் விழா நடைபெற்று வருகிறது.
இதற்காகத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து அம்மனை தரிசித்து வருகின்றனர்.
நேற்று இரவு தரிசனத்திற்காக வந்த பக்தர்கள், கோவில் சன்னதி வீதியில் உள்ள மண்டபத்தில் தங்கி உறங்கினர். இன்று அதிகாலை சுமார் 4 மணியளவில், பக்தர்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது, மண்டபத்தின் சீலிங் மேற்கூரை கான்கிரீட் திடீரென பெயர்ந்து கீழே விழுந்தது.
இளம்பெண் பலி – இருவர் படுகாயம்
இந்த விபத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த நதியா (32) என்ற இளம்பெண் மற்றும் அவரது உறவினர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கினர்.
கான்கிரீட் சிலாப்புகள் பலமாக தாக்கியதில் நதியா ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
அவருடன் இருந்த மேலும் இரண்டு பெண் பக்தர்கள் பலத்த காயமடைந்தனர். அருகில் இருந்த பக்தர்கள் அவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி மகாத்மா காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கும்பாபிஷேகம் முடிந்த 4 ஆண்டுகளில் இடிந்த அவலம்

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்று வெறும் நான்கு ஆண்டுகள் மட்டுமே நிறைவடைந்துள்ளது.
புதிய கட்டுமானங்கள் மற்றும் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட குறுகிய காலத்திலேயே, மேற்கூரை இடிந்து உயிர் பலி வாங்கியிருப்பது பக்தர்களிடமும் சமூக ஆர்வலர்களிடமும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கட்டுமானப் பணிகளின் தரம் குறித்துப் பெரிய கேள்விக்குறி எழுந்துள்ளது.
காவல்துறை மற்றும் நிர்வாகத்தின் நடவடிக்கை
தகவல் அறிந்து விரைந்து வந்த சமயபுரம் போலீசார், உயிரிழந்த நதியாவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
பாதுகாப்பு கருதி சன்னதி வீதி முழுவதும் பேரிகார்டுகள் கொண்டு அடைக்கப்பட்டுள்ளது.
தரமற்ற கட்டுமானமே விபத்திற்கு காரணமா? அல்லது பராமரிப்பு குறைபாடா? என்பது குறித்துப் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விழாக் காலங்களில் இது போன்ற விபத்து நேரிட்டது அம்மனைத் தரிசிக்க வந்த பக்தர்கள் இடையே பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கோடி கணக்கில் வருமானம் வரும் ஒரு கோவிலில், கும்பாபிஷேகம் முடிந்த சில ஆண்டுகளிலேயே கட்டிடம் இடிந்து விழுந்தது எப்படி? இதற்குப் பொறுப்பானவர்கள் யார்? எனப் பக்தர்கள் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.





Comments are closed.