கதிரவன் எம்எல்ஏ தொகுதியில் அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை இல்லாமல் போகும் அவல நிலை – மாவட்ட ஆட்சியரிடம் மனு
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் எம்.எல்.ஏ கதிரவன் தொகுதிக்கு உட்பட்ட சிறப்பத்தூர் ஊராட்சி, வீராணி பகுதியில் அமைந்துள்ள ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவர் சேர்க்கையே இல்லாமல் போய்விடும் நிலைமைக்கு அரசு பள்ளி தள்ளப்பட்டுள்ளது. ஊர் பொதுமக்கள் சார்பில் அனைவரிடமும் கையப்பம் பெற்று மாவட்ட ஆட்சியரிடம் பெரியசாமி என்பவர் மனு அளித்துள்ளார்
மனுவில்
மண்ணச்சநல்லூர் ஒன்றியம், சிறுப்பத்தூர் ஊராட்சி, வீராணி கிராமத்தில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர் சேர்க்கை இல்லாமல் (1-ம் வகுப்பு தற்போது 2-மாணவர்கள் மட்டுமே பயின்று வருகிறார்கள்) உள்ளது. அடுத்த ஆண்டு மாணவர் சேர்க்கை இல்லாமல் போகும் நிலை உள்ளது. அதற்கு காரணம் ஆங்கிலவழி கல்வி இல்லாத காரணத்தினால்தான் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை அருகில் உள்ள 3 கி.மீ தொலைவில் கீழப்பட்டி மற்றும் சாலப்பட்டி கிராமத்தில் அரசு பள்ளியில் ஆங்கில வழி கல்வியில் குழந்தைகளை சேர்த்துள்ளார்கள். வீராணியிலிருந்து சுமார் 35 குழந்தைகள் வெளி அரசு பள்ளியில் சேர்த்துள்ளனர். ஆகவே உடனடியாக வீராணி அரசுபள்ளியில் ஆங்கில வழி கல்வியை நடைமுறைக்கு கொண்டும் வரும்படி பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். கொண்டு வந்தால் மட்டுமே இப்பள்ளி தொடர்ந்து செயல்படும். இல்லாவிடில் மாணவர் சேர்க்கையே இல்லாமல் போய் விடும் நிலை உள்ளது. ஆகவே தகுந்த துறைக்கு ஆவணம் செய்யும்படி ஊர் பொதுமக்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறோம் என்று குறிப்பிட்டு இருந்தனர்.
இது குறித்து காரணம் என்ன என்று அப்பகுதி மக்களிடம் கேட்டபோது,..
அருகில் உள்ள கிழப்பட்டி, சலைப்பட்டி பள்ளிகள் தமிழ் கல்வி முறையில் இருந்து, ஆங்கில கல்வி முறையில் மாறிவிட்டார்கள். பெற்றோர்கள் அனைவரும் அதிகம் ஆசைப்படுவது தனது குழந்தைகள் ஆங்கில வழி கல்வி முறையில் பயில வேண்டும் என்பதே, அதன் அடிப்படையில் மிக அருகாமையில் இருக்கும் பள்ளிகள் ஆங்கில வழி கல்வியில் பயிலக்கூடிய முறைகளை கொண்டு வந்து விட்டார்கள். ஆனால் வீராணியில் அமைந்துள்ள ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆங்கில கல்வி முறைப்படி மாற்றவில்லை, அதனால் தான் தற்போது 1 ஆம் வகுப்பிற்கு,
2 குழந்தைகள் மட்டுமே சேர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே, ஒன்றிய நடுநிலை பள்ளியில் மிக விரைவில் தமிழ் வழி கல்வி முறையுடன், ஆங்கில வழி கல்வி முறையையும் கொண்டு வர வேண்டும். அவ்வாறு கொண்டு வந்தால் மாணவர் சேர்க்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இது சம்மந்தமாக விரைவில் ஊர் பொதுமக்கள் அனைவரும் ஒன்றிணைந்து மாவட்ட ஆட்சியரிடம், பள்ளி கல்வித்துறை அலுவலருக்கும், முதலமைச்சர் தனி பிரிவுக்கும் மனு அழைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
ஆங்கில வழி கல்வி முறை மாற்றாமல் இருப்பதற்கு என்ன காரணம் என்று வினா எழுப்பிய போது,..
இப்பள்ளியில் உள்ள ஆசிரியர்கள், நிர்வாகத்திடம் முறையிட்டால் இரண்டு கல்வி முறையும் கிடைக்க வாய்ப்புள்ளது. ஆனால் ஆசிரியர்கள் இதற்கு முன் வரவில்லை. அதற்கு காரணம் வேலை பளு அதிகமாகும் என்பதே. மாணவர்களுக்கு தமிழ் முறைப்படியும், ஆங்கில முறைப்படியும் வகுப்புகள் எடுக்க வேண்டிய சூழல் ஏற்படும் என்பதை கருத்தில் கொண்டு ஆசிரியர்கள் மறுப்பு தெரிவித்து வருகிறார்கள் எனக் கூறினர்.
தமிழ் முறைப்படி பயின்று வரும் மாணவர்களுக்கு அரசு சலுகைகள் வழங்கப்படுகிறது. அதனை பெற்றோர்களிடம் எடுத்துக் கூறி மாணவர்கள் சேர்க்கையை அதிகப்படுத்தி இருக்கலாம். அல்லது, தமிழுடன் சேர்ந்து ஆங்கில வழி கல்வி முறையையும் பள்ளியில் இணைத்திருக்கலாம். இதற்கு ஆர்வம் இல்லாமல் பள்ளி ஆசிரியர்கள் செயல்படுவது வருத்தமாக உள்ளது என தெரிவித்தனர்.
பெற்றோர்கள் அனைவருக்கும் குழந்தையின் எதிர்காலம் குறித்து மட்டுமே அதிக ஆர்வம் இருக்கும். அதற்கு தகுந்தார் போல் அரசு மிக விரைவில் நடவடிக்கை எடுத்து ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தமிழ் வழி கல்வி முறையுடன், ஆங்கில வழி கல்வி முறையையும் கொண்டு வந்தால், இப்பகுதியில் உள்ள மாணவர்களுக்கு இரண்டு வழி கல்வி முறையும் கிடைக்கும், மாணவர் சேர்க்கையும் அதிகரிக்கும் என்ற நம்பிக்கை உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். மேலும் தொடர்ந்து தமிழ் வழி முறைப்படி மட்டுமே பள்ளி செயல்பட்டால் , மாணவர் சேர்க்கையே இல்லாமல் போகக்கூட வாய்ப்புள்ளது என்றனர்.
பின்னர், உங்கள் தொகுதி எம்எல்ஏ கதிரவன் உங்கள் பகுதிக்கு ஆய்வுக்கு வந்துள்ளாரா என்ற கேள்விக்கு?
அவர் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு இன்று வரை ஒரு நாள் கூட எங்களது ஊராட்சி பக்கம் அவரை பார்த்ததில்லை என்று தெரிவித்தனர்.
Comments are closed.