கோவையில் அரைகுறையாக செம்மொழி பூங்கா திறப்பு – முதல்வர் ஸ்டாலின் மீது குற்றச்சாட்டு.
கோவையில் அரைகுறையாக செம்மொழி பூங்கா திறப்பு – முதல்வர் ஸ்டாலின் மீது குற்றச்சாட்டு.
கோவை மக்களை ஏமாற்றி, ஓட்டுகளை அறுவடை செய்யலாம் என்று, பகல் கனவு காண்கிறார் என பழனிசாமி சாடல்.
70 சதவீத பணிகள் மட்டுமே முடிந்துள்ள நிலையில், வெற்று விளம்பத்திற்காக, கோவை செம்மொழி பூங்கா திறக்கப்பட்டுள்ளது.

அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
அவரது அறிக்கை:
கடந்த 25ம் தேதி கோவை வந்த முதல்வர் ஸ்டாலின், காந்திபுரம், சிறைச்சாலை மைதான வளாகத்தில், 204 கோடி ரூபாயில் கட்டப்பட்டு வந்த செம்மொழி பூங்காவை, பணிகள் முடிவடையாமல், அவசர கதியில் விளம்பரத்திற்காக திறந்து வைத்துள்ளார். 70 சதவீத பணிகள் மட்டுமே முடிந்துள்ளதாக, கோவை மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இதற்கு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் அனுமதி பெறப்படவில்லை; 30 சதவீத மரங்கள் நடப்படவில்லை. செயற்கை புல் தரைகள் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளன. முன் நுழைவு வாயில் முகப்பு, மாநாட்டு மையம், சுற்றுச்சுவர், கட்டண விளையாட்டு மைதானம், திறந்தவெளி உடற்பயிற்சிக் கூடம் போன்ற பணிகள் முடிக்கப்படவில்லை. கோவை மாநகராட்சியில் பல இடங்களில் தெரு விளக்குகள் எரிவதில்லை; ஏற்கெனவே இருக்கும் பூங்காக்கள் சரிவர பராமரிக்கப்படுவதில்லை என்று மக்கள் அடுக்கடுக்காக புகார்கள் தெரிவித்தும், ஏற்கெனவே அளித்த நிர்வாக அனுமதியைக் காட்டிலும் 40 கோடி ரூபாய் கூடுதலாக செலவிட்டும், முழுமை பெறாத இந்தப் பூங்காவை அவசர அவசரமாகத் திறந்தது ஏன்? போதுமான கழிப்பிட வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை. விளையாட்டு உபகரணங்கள் அமைக்கப்படவில்லை. கிரானைட் கற்கள் பதிக்கும் பணிகள் முழுமை அடையவில்லை. இப்பூங்காவில் பல பணிகள், ‘டெண்டர்’ கோரப்படாமல், ‘நாமினேஷன்’ முறையில், தி.மு.க., அரசுக்கு வேண்டிய ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ், அ.தி.மு.க., ஆட்சியில் உருவாக்கப்பட்ட உக்கடம்- பெரியகுளம், குறிச்சி குளம், வாலாங்குளம், முத்தண்ணன் குளம், செல்வசிந்தாமணி குளம், குமாரசாமி குளம், கிருஷ்ணாம்பதி குளம் ஆகிய பூங்காக்கள், தற்போது ஆகாயத் தாமரைகள் படர்ந்து பராமரிப்பின்றி உள்ளன. அ.தி.மு.க., ஆட்சியில் கட்டப்பட்ட பூங்காக்கள், குளங்கள் என்ற ஒரே காரணத்திற்காக, இவைகளை மாநகராட்சி நிர்வாகம் பராமரிக்காமல் உள்ளது.திமுக அரசு பொறுப்பேற்று 5 ஆண்டுகள் முடிவடைய உள்ள நிலையில், இதுவரை கோவை மாவட்ட மக்களையும், தொழில் துறையினரின் கோரிக்கைகளையும் திமுக அரசு தொடர்ந்து புறக்கணித்தே வருகிறது. கோவை மாவட்டத்தில் முக்கிய சாலைகள் மற்றும் இணைப்புச் சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். சாலைகளை சீரமைக்க இந்த அரசு எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. அ.தி.மு.க., ஆட்சியில் திட்டமிட்ட, கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு, சரியான முறையில் முன்மொழிவு அனுப்பாத காரணத்தால், இத்திட்டம் மத்திய அரசால் திருப்பி அனுப்பப்பட்டது. கோவை விமான நிலைய விரிவாக்கமும் கிடப்பில் உள்ளது. அ.தி.மு.க., அரசு கொண்டு வந்த பல திட்டங்களை, தி.மு.க., அரசு கைவிட்டு விட்டது. இந்நிலையில், எடுத்தேன் கவிழ்த்தேன் என்று, அரசு சக்கரத்தை சுழற்றும் குணம் கொண்ட முதல்வர் ஸ்டாலின், அரைகுறையாக செம்மொழி பூங்காவை திறந்து வைத்து, கோவை மக்களை ஏமாற்றி, ஓட்டுகளை அறுவடை செய்யலாம் என்று, பகல் கனவு காண்கிறார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Comments are closed.