ரூ.2000 நோட்டுகளை புழக்கத்தில் இருந்து நீக்க முடிவு – இந்திய ரிசர்வ் வங்கி முழு விவரத்துடன்
ரூ.2000 நோட்டுகளை புழக்கத்தில் இருந்து நீக்க முடிவு – இந்திய ரிசர்வ் வங்கி முழு விவரத்துடன்
இந்திய ரிசர்வ் வங்கி ரூ.2000 நோட்டுகளை புழக்கத்தில் இருந்து நீக்க முடிவு செய்துள்ளது. இதையடுத்து, மக்கள் தங்கள் கைவசம் உள்ள ரூ.2000 நோட்டுகளை மே 23-ம்தேதி முதல் வங்கிகள் மூலமாக மாற்றிக்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்கு செப்.30-ம் தேதி வரை அவகாசம் தரப்பட்டுள்ளது. அனைத்து ரூ.2000 நோட்டுகளையும் புழக்கத்தில் இருந்து அகற்ற ரிசர்வ் வங்கி முடிவெடுத்துள்ள நிலையில் வங்கிகள் அந்த நோட்டுகளை பொதுமக்களுக்கு விநியோகிக்க கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ரூ.2000 நோட்டுகளை திரும்ப பெறுவது தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கி நேற்று வெளியிட்ட அறிவிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த 2016-ம் ஆண்டு நவ.8-ம் தேதி ரிசர்வ் வங்கியின் வாரியக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில், அப்போது புழக்கத்தில் இருந்த ரூ.500, ரூ.1000 நோட்டுகள் திரும்ப பெறப்பட்டன. அதற்கு மாற்றாக, பொருளாதாரத்தில் கரன்சிகளுக்கான தேவையை நிறைவுசெய்யும் வகையில் புதிதாக முதன்முதலில் ரூ.2000 நோட்டுகள் 2016 நவ.2-ம் தேதி அறிமுகம் செய்யப்பட்டன. ரிசர்வ் வங்கி சட்டம் 24(1) பிரிவின் கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
பொருளாதாரத்தில் இதர மதிப்புகளில் கரன்சி நோட்டுகள் போதுமான அளவில் இருப்பதை உறுதி செய்வதற்காகவே ரூ.2000 நோட்டுகள் அப்போது வெளியிடப்பட்டன.
அச்சிடுவது நிறுத்தம்: இந்த நிலையில், கடந்த 2018-19-ம் ஆண்டு முதல் ரூ.2000 நோட்டுகளை அச்சிடுவது முழுவதுமாக நிறுத்தப்பட்டுவிட்டது. தற்போது புழக்கத்தில் உள்ள 89 சதவீத ரூ.2000 நோட்டுகள் கடந்த 2017 மார்ச் மாதத்துக்கு முன்பாக அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டவை ஆகும்.
எனவே, பொதுவெளியில் ரூ.2000 நோட்டுகளின் புழக்கம் என்பது தற்போதைய நிலையில் பெருமளவு குறைந்துவிட்டது.
குறைந்துபோன புழக்கம்: அதன்படி, உச்சபட்சமாக கடந்த 2018 மார்ச் 31-ம் தேதி ரூ.6.73 லட்சம்கோடி மதிப்புக்கு புழக்கத்தில் இருந்த ரூ.2000 நோட்டுகள் ரூ.3.62 லட்சம் கோடியாக குறைந்துவிட்டது. இது, மொத்த பணப் புழக்கத்தில் 10.8 சதவீதம் மட்டுமே.
இந்த நிலையில், கரன்சி புழக்கத்தின் தேவையை நிறைவு செய்ய இதர மதிப்புடைய கரன்சி நோட்டுகளே போதும் என்பதால் ரூ.2000 நோட்டுகளை திரும்ப பெறும் முடிவுக்கு ரிசர்வ் வங்கி தற்போது வந்துள்ளது. ‘கிளீன் நோட் பாலிசி’ என்ற அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து செல்லுபடியாகும்: ரூ.2000 நோட்டுகளை திரும்ப பெறும் அறிவிப்பு வெளியிடப்பட்டாலும், சட்டப்பூர்வ அடிப்படையில் அந்தநோட்டுகள் தொடர்ந்து செல்லுபடியாகும்.
4 மாதங்களுக்கு மேல் அவகாசம்: பொதுமக்கள் தங்களிடம் உள்ள ரூ.2000 நோட்டுகளை மே 23-ம்தேதி முதல் வங்கிகளில் இதர மதிப்புடைய கரன்சிகளாக மாற்றிக் கொள்ளலாம். இதற்கு செப்.30-ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கான சிறப்பு ஏற்பாடுகளை செய்ய வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வங்கிகளில் கூட்டம் கூடுவதை தடுக்கவும், வழக்கமான பணிகளைஅவர்கள் மேற்கொள்ள வசதியாகவும் ரூ.2000 நோட்டுகளை மாற்றிக்கொள்ள வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வங்கிகளில் நாள் ஒன்றுக்கு ரூ.20,000 மதிப்பிலானநோட்டுகளை மட்டுமே தனிநபர் ஒருவர் மாற்றிக் கொள்ள முடியும். இதுதொடர்பாக, அனைத்து வங்கிகளுக்கும் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
வங்கிகள் மட்டுமின்றி, ரிசர்வ்வங்கியின் 19 மண்டல அலுவலகங்களிலும் ரூ.2000 நோட்டுகளை வரும் செவ்வாய்க்கிழமை (மே 23) முதல் மாற்றிக்கொள்ள சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இனி புழக்கத்தில் விடக்கூடாது: அனைத்து ரூ.2000 நோட்டுகளையும் புழக்கத்தில் இருந்து அகற்ற ரிசர்வ் வங்கி முடிவெடுத்துள்ள நிலையில் வங்கிகள் அந்த நோட்டுகளை பொதுமக்களுக்கு விநியோகிக்க கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது.
இவ்வாறு ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.