திருமயத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழா எழுச்சியுடன் கொண்டாட்டம்: 600-க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கி சிறப்பிப்பு!

திருமயத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழா எழுச்சியுடன் கொண்டாட்டம்: 600-க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கி சிறப்பிப்பு!
திருமயம்:
புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில், தேசியமும் தெய்வீகமும் தனது இரு கண்களாகக் கொண்டு வாழ்ந்த பசும்பொன் உ. முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் ஜெயந்தி விழா மிகச் சிறப்பாகவும் எழுச்சியுடனும் கொண்டாடப்பட்டது.

விழாவிற்கு ஓய்வுபெற்ற ஆசிரியர் திரு. பொன்னையா தலைமை தாங்கி, மங்கள விளக்கேற்றி, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து, சுற்றுச்சூழலின் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் பொதுமக்களுக்கு மரக்கன்றுகளை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இந்நிகழ்வில் கே.ஆர். ராமசாமி, அம்மன்பட்டி பழனிவேலு, லெம்பலக்குடி பழனிவேல், விவசாய சங்க ஒன்றிய செயலாளர் குணச்சித்திரன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் முன்னிலை வகித்தனர். மேலும் முக்குலத்தோர் சமுதாயப் பெரியவர்கள், இளைஞர்கள் மற்றும் சங்க நிர்வாகிகள் பெருந்திரளாகக் கலந்துகொண்டு தேவர் திருமகனாருக்கு தங்களது வீரவணக்கத்தையும் மரியாதையையும் செலுத்தினர்.
விழாவை முன்னிட்டுப் பொதுமக்களுக்கு காலை சிற்றுண்டியாக இட்லி, பொங்கல், வடை, கேசரி மற்றும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் பாட்டில்கள் நிறைவாக வழங்கப்பட்டன. சுமார் 600-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் இச்சிறப்பு அன்னதானத்தில் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.
இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் முக்குலத்தோர் சங்க நிர்வாகிகள், சிங்கப்பூர் வாழ் இளைஞர்கள் மற்றும் சுற்றுவட்டாரப் பொதுமக்கள் ஒருங்கிணைந்து மிகச் சிறப்பாகச் செய்திருந்தனர்.





Comments are closed.