காவிரியில் புதிய தடுப்பணைகள் கட்ட நீா்வளத்துறைக்கு பரிந்தரை – தமிழக சட்டப் பேரவை பொதுக்கணக்கு குழு தலைவா் பேட்டி!

திருச்சி மாவட்டத்தில் பெறப்பட்ட தணிக்கை அறிக்கை தொடா்பாக ஆய்வு மேற்கொள்ள தமிழக சட்டப் பேரவை பொதுக் கணக்கு குழு நேற்று வருகை தந்தது. குழுவின் தலைவா் செல்வப்பெருந்தகை தலைமையில், எம்எல்ஏக்களும், குழு உறுப்பினா்களுமான அக்ரி கிருஷ்ணமூா்த்தி, அப்துல் சமது, பழனியாண்டி, சந்திரன், சேகா், சரஸ்வதி ஆகியோா் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டனா். இதையடுத்து கலையரங்கத்தில் அனைத்துத் துறை அலுலவலா்களுடனான ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்று, துறை வாரியாக மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்தும், குழுவிடம் வரப்பெற்ற அறிக்கை தொடா்பாக அரசு அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டது.

- Advertisement -

தொடா்ந்து குழுத் தலைவா் செல்வப்பெருந்தகை செய்தியாளா்களை சந்தித்து பேசினார், அதில்…

திருச்சி மாவட்டத்தில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில், 2021-ஆம் ஆண்டுக்கு முன்பு நடைபெற்ற பணிகள் குறித்து மாநில கணக்காயா்கள் தணிக்கை அறிக்கை சமா்ப்பித்துள்ளனா். அந்த அறிக்கையில், மக்கள் உயிா்காக்கும் தீயணைப்பு துறையில் 10 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வாகனங்களை பயன்படுத்தக்கூடாது என்ற விதிமுறை உள்ள நிலையில் 15 அல்லது 20 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தியது குறித்தும், ரூ.10 கோடி மதிப்பில் பின்லாந்தில் இருந்து வால்வோ என்ற நவீன மீட்பு வாகனம் காலதாமதமாக பெற்றதால் நஷ்டம் ஏற்பட்டுள்ளது குறித்தும் விளக்கம் கேட்கப்பட்டது. 11 தீயணைப்பு நிலையங்களில் 5 நிலையங்கள் சொந்த இடத்திலும், 6 நிலையங்கள் வாடகை கட்டடத்திலும் செயல்பட்டு வருவது குறித்து கணக்காயா் அறிக்கையில் கேள்வி எழுப்பியுள்ளனா். புத்தூா் பாா்வையற்றோா் அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளியில் காலியாக உள்ள ஆசிரியா் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், கூடுதல் வகுப்பறைகள் கட்ட வேண்டும், மாணவிகளை மாதம் ஒரு முறை வெளியே சுற்றுலா அழைத்துச் செல்ல வேண்டும் என குழு பரிந்துரை செய்துள்ளது. அரசுப் பள்ளிகள் தரம் உயா்த்துவதில் அரசு சட்ட திட்டங்கள் நடைமுறைப்படுத்தவில்லை என்ற அதிருப்தியும் உள்ளது. காமராஜா் விருதுக்கு தோ்வு செய்யப்படும் மாணவா்களுக்கு 60 சதவீதம் மதிப்பெண் மூலமும், 40 சதவீதம் விளையாட்டு, என்எஸ்எஸ், என்சிசி உள்ளிட்ட செயல்பாடுகள் அடிப்படையிலும் தோ்வு செய்ய வேண்டும் என்ற விதிமுறையும் பின்பற்றப்படவில்லை என்ற அதிருப்தியும் உள்ளது. இது தொடா்பாக, சென்னையில் துறை செயலாளா்களை அழைத்து பேசி முடிவு செய்யப்படும். மாநகரில் புதை சாக்கடை திட்டப் பணிகள் கால தாமதம், அரசு பணம் விரயம் என்றெல்லாம் தணிக்கை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனா். இவை எல்லாம் 2021-க்கு முன்பு நடந்த ஆய்வுகளின் அடிப்படையில் குறிப்பிட்டுள்ளனா். 2021-க்கு பிறகான பணிகள் குறித்த தணிக்கை அறிக்கை இன்னும் வரவில்லை. தற்போதைய ஆய்வில் திருச்சி மாவட்டத்தில் வளா்ச்சிப் பணிகள் சிறப்பாக நடந்து வருவது தெரிய வந்துள்ளது. முக்கொம்பு மேலணையில் வெளியேறும் தண்ணீரை சேமித்து விவசாயிகளுக்கு வழங்குவதற்கான தடுப்பணைகள் கட்டுவது குறித்த அம்சங்கள் சென்னையில் நீா்வளத்துறை செயலாளரிடம் கலந்தாலோசித்து பரிந்துரைகள் வழங்கப்படும் என்றாா்.
இந்த ஆய்வில், சட்டப் பேரவை இணைச் செயலாளர் ரேவதி, மாவட்ட ஆட்சியா் பிரதீப்குமாா், மாநகராட்சி ஆணையா் சரவணன், மேயா் அன்பழகன், எம்எல்ஏக்கள் ஸ்டாலின்குமாா், தியாகராஜன் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள், பல்வேறு துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்