மாவட்ட ஆட்சியரின் ஆய்வுக்கூட்டத்தில் மருத்துவர்களுக்கு உரிய மரியாதை வழங்க வேண்டும் – திருச்சியில் மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவ சங்கத்தினர் பேட்டி!
மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவ சங்க கூட்டமைப்பின் சார்பில், திருச்சியில் உள்ள இந்திய மருத்துவ மன்றத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சங்கத்தின் மாநில தலைவர் டாக்டர் ரமணிதேவி, திருச்சி சங்கத் தலைவர் தமிழ்ச்செல்வி ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்து பேசினர், அதில்…
மகப்பேறு மருத்துவர்கள்
தாய் சேய் இருவரையும் காப்பாற்றும் மிகப் பெரிய பொறுப்பில் இருக்கிறார்கள். ஒவ்வொரு மகப்பேறிலும் அவர்கள் அடையும் மன அழுத்தம் அளவிட முடியாதது. மகப்பேறு கால இறப்பைக் குறைப்பதில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. அரசு, தனியார் இரண்டு துறைகளின் மகப்பேறு மருத்துவர்கள், துறை செவிலியர்கள், மற்ற ஊழியர்கள் அனைவரின் உழைப்பால் இது நடந்துள்ளது. ஆனால் இன்றைய சூழலில் அவர்களின் மேல் அழுத்தம் அதிகமாக உள்ளது.
மாவட்ட ஆட்சியரின் ஆய்வுக் கூட்டத்தில் மருத்துவர்களுக்கு உரிய மரியாதை தர வேண்டும். ஆய்வுக் கூட்டம் நடத்தும் நாளும் நேரமும் குறிப்பிட்டு சொல்லப்பட வேண்டும். இரவு 11 மணி வரை கூட்டம் நடத்துவது, மருத்துவமனை உரிமம் ரத்து செய்வதாக மிரட்டுவது, மருத்துவர்களின் பட்டத்தைக் கேலி செய்வது, மருத்துவர்களை கொலையாளியைப் போல சித்தரிப்பது, நோயாளியின் கேஸ் ஷீட் ஐ கோபத்தில் கிழித்து எறிவது போன்ற செயல்கள் மிகவும் வருத்தமளிக்கிறது. இது குறித்த அரசிடம் தகவல் தெரிவிக்க உள்ளோம்.
மருத்துவ நிபுணர்கள் குழு ஆய்வு செய்து தந்த அறிக்கையின் படிதான் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட வேண்டும். அதில் அரசு, தனியார் இரண்டிலும் உள்ள மூத்த மருத்துவர்கள் இடம் பெற வேண்டும். அரசும், நிர்வாகமும் மகப்பேறு மருத்துவர்களைப் பற்றி ஊடகங்களில் தகவல் தெரிவிப்பது, மக்களிடம் மருத்துவருக்கு எதிரான அணுகுமுறையை உருவாக்கும். மருத்துவரைத் தாக்கும் மனநிலை சமுதாயத்தில் மாற வேண்டும். மருத்துவமனைகளை எல்-1,2,3 என தரம் பிரித்தல் என்பது நடைமுறையில் சாத்தியமில்லை.
வீட்டில் பிரசவம் பார்ப்பது, அதற்கு ஒரு வாட்ஸ்அப் குழு மூலம் விழா நடத்தி பரிசு வழங்குவது ஆகியவற்றை கடுமையாக எதிர்க்கிறோம். எந்த மருத்துவரும் நோயாளியின் நிலை நலம் பெறவே பாடுபடுகிறோம் என தெரிவித்தார். இந்நிகழ்வில் இந்திய மருத்துவ மன்றத்தின் தலைவர் டாக்டர் சுரேந்திர பாபு, செயலாளர் முகேஷ் மோகன் மற்றும் மருத்துவர்கள் அஷ்ரப், சர்மிளா, உமா வேல்முருகன், ஜெயம் கண்ணன், ஜெயம் ராமலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Comments are closed.