திருச்சி அரசு மருத்துவமனை சித்த மருத்துவப்பிரிவில் புதிய சிகிச்சை மைய கட்டிடங்கள் திறப்பு!
திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை வளாகத்தில் சித்த மருத்துவப்பிரிவின் சார்பில் ரூ.37.50 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள உள் நோயாளிகளுக்கான சிறப்பு சிகிச்சை கட்டிடத்தை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று திறந்து வைத்தார். தொடர்ந்து கட்டிடத்தின் உள்கட்டமைப்பு வசதிகளை பார்வையிட்டு, அங்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.


இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் சரவணன், மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் மதுபாலன், மாவட்ட நகர் ஊரமைப்புக் குழு உறுப்பினர் வைரமணி, அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் குமரவேல், மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் வத்சலா, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் அன்பரசி மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் ஆயுஷ் பிரிவில் சித்தா, ஆயுர்வேதா, ஹோமியோபதி மற்றும் இயற்கை யோகா மருத்துவ முறைகள் இயங்கி வருகிறது. இந்த ஆயுஷ் பிரிவுகளில் தனித்தனியே வெளி நோயாளிகள் பிரிவும், 16 படுக்கைகள் கொண்ட உள்நோயாளிகள் பகுதியும் செயல்பட்டு வருகிறது. உள்நோயாளிகள் பிரிவில் சிறப்பு சிகிச்சைகள் 25 முதல் 30 நபர்கள் பயன் பெற்று வருகின்றனர். இப்பொழுது இந்த சிகிச்சை பிரிவுகளுக்கான புதிய கட்டடம் ஏற்படுத்தப்பட்டதனால் பொதுமக்கள் இன்னும் அதிக அளவில் பயன்பெறுவர்.
சிறப்பு சிகிச்சைகளான வர்மா, தொக்கணம் (மசாஜ்), கட்டு, பற்று, ஒற்றடம், நீராவி பிடித்தல், (IR lamp) இன்ஃப்ரா ரெட் லேம்ப் தெரபி போன்ற சிகிச்சைகள் செய்வதற்கு ஆண் பெண்களுக்கு தனித்தனியே இடவசதி உள்ளிட்ட வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள இக்கட்டடத்தை இன்று நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்.





Comments are closed.