மதுரை கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு – போலி பட்டாவை ரத்து செய்யக்கோரி மனு!
மதுரை கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு – போலி பட்டாவை ரத்து செய்யக்கோரி மனு!
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில், வண்டியூர் பள்ளிவாசல் தெரு பகுதியைச் சேர்ந்த பரசுராமன் என்பவரின் மகன் வசந்தகுமார் (எ) கருப்புசாரி என்பவர், தனது பூர்வீக நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் ஆக்கிரமிக்க முயற்சிப்பதாகக் கூறி மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.

மனுவின் பின்னணி விபரம்:-
மதுரை கிழக்கு வட்டம், வண்டியூர் II-பிட் கிராமத்தில் உள்ள சர்வே எண்: 111/6E1-ல் உள்ள 40 செண்ட் நிலம் எனது தாத்தா சீ.க.சொக்கணாண்டி அம்பலம் என்பவரால் கிரையம் பெறப்பட்டு, குடும்ப பாகப்பிரிவினையின்படி எங்கள் குடும்பத்திற்குப் பாத்தியப்பட்டு, எங்கள் பெயரில் பட்டா இருந்தது.
இந்த 40 செண்ட் நிலத்தின் கீழ்புறம் உள்ள 20 செண்ட்டில், எனது தாயார் P.மணிமேகலை கடந்த 1999-ஆம் ஆண்டு (ஆவண எண்: 951/1999) V.V.ராஜன் என்பவருக்கு 600 சதுரடி நிலத்தை விற்பனை செய்தார். மேலும், எனது தாயாரும், சகோதரி மீனாம்பிகையும் இணைந்து (ஆவண எண்: 1973/1999) வண்டியூர் பங்குனி உத்திர திருவிழா சங்கத்தினருக்கு 774 சதுரடி காலி மனையை கிரையம் செய்து கொடுத்தனர்.

”மேற்கண்ட ஆவணப் பரிவர்த்தனை விபரங்களை முழுமையாக மறைத்து, எவ்வித சட்டப்பூர்வ ஆவணங்களும் இன்றி, UDR கணக்குகளில் சர்வே எண் 111/6E1B என முறைகேடாகத் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ராஜம் என்பவரின் பெயரில் போலியாக பட்டா மாற்றம் செய்யப்பட்டுள்ளது” என வசந்தகுமார் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தற்போது மதுரை காவல் ஆணையரகத்தில் பணிபுரிந்து வரும் நல்லமணி (எ) சதீஸ் என்பவரது குடும்பத்தினர், இந்த தவறான UDR பட்டாவைப் பயன்படுத்தி பத்திரம் பதிவு செய்து, தங்களது பூர்வீக இடத்தை ஆக்கிரமிக்க முயற்சி செய்து வருவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து மனுதாரர் வசந்தகுமார் மேலும் கூறுகையில்,
”UDR கணக்கில் ஏற்பட்ட இந்த தவறான பட்டாவை ரத்து செய்யக்கோரி கடந்த 2013-ஆம் ஆண்டே மனு அளித்திருந்தேன். அதன் அடிப்படையில் கிராம நிர்வாக அலுவலர் (VAO) மற்றும் வருவாய் ஆய்வாளர் (RI) ஆகியோர் விசாரணை அறிக்கை சமர்ப்பித்தும் (தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட நகல் இணைக்கப்பட்டுள்ளது), கடந்த 13 ஆண்டுகளாக எவ்வித முன்னேற்றமும் இல்லை. அதன் பிறகு நான் பலமுறை மனுக்கள் அளித்தும் அதிகாரிகள் எந்த விசாரணையும் மேற்கொள்ளவில்லை.”
எனவே, UDR கணக்கில் முறைகேடாக ஏற்பட்ட போலி பட்டாவை உடனடியாக ரத்து செய்து, தங்களது பெயரில் மீண்டும் பட்டா வழங்க வேண்டும் எனவும், போலி ஆவணங்கள் பதிவு செய்துள்ள போலீஸ்காரர் நல்லமணி (எ) சதீஸ் குடும்பத்தினர் மற்றும் தேவானந்த் ஆகியோர் மீது உரிய சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனுவில் கோரியுள்ளார்.





Comments are closed.