செந்தில்பாலாஜியின் உடல்நிலையை அமலாக்கத் துறை நியமிக்கும் மருத்துவக் குழுவும் ஆராயலாம் – சென்னை உயர் நீதிமன்றம்
செந்தில்பாலாஜியை மருத்துவ சிகிச்சைக்காக காவேரி மருத்துவமனைக்கு மாற்ற அனுமதி – சென்னை உயர் நீதிமன்றம்
ஒமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் அமைச்சர் செந்தில்பாலாஜியை மருத்துவ சிகிச்சைக்காக காவேரி மருத்துவமனைக்கு மாற்ற அனுமதியளித்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அமலாக்கத் துறையினர் அமைச்சர் செந்தில்பாலாஜியை கைது செய்த நிலையில், நெஞ்சு வலியால் பாதிக்கப்பட்ட அவரை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சென்னை முதன்மை அமர்வு நீதிபதி எஸ்.அல்லி புதன்கிழமை பிற்பகலில் மருத்துவமனைக்குச் சென்று செந்தில்பாலாஜியை சந்தித்த பின்னர், வரும் 28-ம்தேதி வரை அவரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார்.
இதற்கிடையில், செந்தில்பாலாஜியை சட்டவிரோதக் காவலில் வைத்துள்ளதாகவும், அவரை மீட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் எனக் கோரியும் அவரது மனைவி மேகலா சார்பில் உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்கக் கோரி, உயர் நீதிமன்ற நீதிபதிகள் எம்.சுந்தர், ஆர்.சக்திவேல் ஆகியோர் அடங்கிய அமர்வில், செந்தில்பாலாஜி தரப்பு மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ புதன்கிழமை முறையீடு செய்தார். ஆனால் நீதிபதி ஆர்.சக்திவேல் இந்த வழக்கை விசாரிக்க விரும்பவில்லை என்று தெரிவித்ததால் புதன்கிழமை மாலை இதுகுறித்து தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா முன்னிலையில் முறையிடப்பட்டது.
இதையடுத்து, புதன்கிழமை மாலை வேறு ஒரு அமர்வில் இந்த ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு வரவிருந்த நிலையில், செந்தில்பாலாஜியை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டதால், ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு வரவில்லை.
இந்நிலையில், உயர் நீதிமந்ற நீதிபதிகள் நிஷா பானு, பரதசக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் இந்த வழக்கு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில்பாலாஜி மனைவி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, “இந்த வழக்கைப் பொறுத்தவரை, செவ்வாய்க்கிழமை முதல் புதன்கிழமை அதிகாலை வரை அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை செய்துள்ளனர். பின்னர், செந்தில்பாலாஜிக்கு உடல்நிலை சரியில்லை என்ற காரணத்தால், ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். நீதிமன்ற காவலில் வைப்பதை நிராகரிக்கக் கோரிய எங்களது தரப்பு கோரிக்கை மறுக்கப்பட்டு. அவர் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
மேலும், அவரை கைது செய்யும்போது பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் எதுவும் பின்பற்றப்படவில்லை. எனவே, இந்த ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்தது. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, ரிமாண்ட சட்டவிரோதமாகவோ, இயந்திரத்தனமாகவோ இருந்தால் ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்தது என்று தெரிவித்துள்ளது. இந்த வழக்கைப் பொறுத்தவரை, செந்தில்பாலாஜிக்கு எந்த ஒரு நோட்டீஸும் கொடுக்கப்படவில்லை. அவருடைய கைது குறித்த விவரங்கள், குடும்பத்தினருக்கு தெரியப்படுத்தவில்லை. செந்தில்பாலாஜிக்கு கைதுக்கான காரணங்கள் குறித்து தெரிவிக்கப்படவில்லை என்பதால் இந்த மனு விசாரணைக்கு உகந்தது.
தற்போது, நீதிமன்ற காவலில் இருக்கும் செந்தில்பாலாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் நிலையில், அவருக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனையில், இதயத்தில் மூன்று அடைப்புகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவருக்கு உடனடியாக பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ள பரிந்துரைக்கப்பட்டுள்ளது. எனவே, அவரை காவேரி மருத்துவமனைக்கு மாற்ற அனுமதிக்க வேண்டும்” என்று கோரி வாதிடப்பட்டது.
இதையடுத்து இந்த வழக்கில் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், அமைச்சர் செந்தில்பாலாஜியை மருத்துவ சிகிச்சைக்காக ஓமந்தூரார் மருத்துவமனையில் இருந்து காவேரி மருத்துவமனைக்கு மாற்ற அனுமதியளித்து உத்தரவிட்டனர். மேலும், செந்தில்பாலாஜி மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவுக்கு பதிலளிக்க அமலாக்கத் துறைக்கு உத்தரவிட்டனர்.
மேலும் மருத்துவர்கள் பரிந்துரையை சந்தேகிக்க முடியாது. அத்துடன், செந்தில்பாலாஜி நீதிமன்றக் காவலில் நீடிக்க வேண்டும். அதேநேரத்தில், செந்தில்பாலாஜியின் உடல்நிலையை அமலாக்கத் துறை நியமிக்கும் மருத்துவக் குழுவும் ஆராயலாம் என உத்தரவிட்டு, விசாரணையை வரும் ஜூன் 22-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.