மிக்ஜாம் புயலால் சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் கன மழை பெய்ததால் பல இடங்களில் தண்ணீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை பகுதியில் பல இடங்களில் தேங்கி நிற்கும் தண்ணீரை அகற்றும் பணியில் சென்னை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு வலு சேர்க்கும் விதமாகவும், நிவாரண பணிகளை விரைந்து முடிப்பதற்காகவும் திருச்சி மாநகராட்சி சார்பில் கடந்த 4 ஆம் தேதி 300 தூய்மை பணியாளர்கள், 10 தூய்மைபணி மேற்பார்வையாளர்கள், 3 சுகாதார அலுவலர்கள் என 363 பேர் வெள்ள தடுப்பு உபகரணங்களுடன் 5 பேருந்துகள் மூலம் திருச்சியில் இருந்து சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு தூய்மை பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் திருச்சி மாநகராட்சி சார்பில் சென்னையில் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு தேவையான அரிசி, மளிகை பொருட்கள், பிஸ்கட் பாக்கெட்டுகள், பிரட், பாய், போர்வைகள், மருந்து பொருட்கள், குடிநீர் பாட்டில்கள் என 25 லட்சம் மதிப்பிலான பொருட்களை இன்று திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் மற்றும் மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் ஆகியோர் திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து வாகனங்களில் அனுப்பி வைத்தனர். இந்நிகழ்வில் துணை மேயர் திவ்யா மற்றும் மண்டல குழுத் தலைவர்கள், அரசுத் துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.