பழந்தமிழர்கள் பண்பாட்டில் சுடுமண் பொருட்கள், தமிழரின் தொன்மை சின்னங்கள் கண்காட்சி திருச்சி
பழந்தமிழர்கள் பண்பாட்டில் சுடுமண் பொருட்கள், தமிழரின் தொன்மை சின்னங்கள் கண்காட்சி திருச்சி
திருச்சி தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி தமிழாய்வுத்துறை வளனார் தமிழ் பேரவை சார்பில் நடைபெற்ற தமிழரின் தொன்மை சின்னங்கள் கண்காட்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது கண்காட்சியினை தமிழ் துறை தலைவர் ஜோசப் சகாயராஜ் முன்னிலையில், கல்லூரி முதல்வர் அருள் முனைவர் மரிய தாஸ் தொடங்கி வைத்தார். கல்லூரி அதிபர் அருள் முனைவர் பவுல் மைக்கேல், செயலர் அருள் முனைவர் ஆரோக்கியசாமி சேவியர், துணை முதல்வர் குமார் , தேர்வு நெறியாளர் அலெக்ஸ் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.

சுடுமண் பொருட்கள் சேகரிப்பாளர் சந்திரசேகரன் சுடுமண் பொருட்கள் குறித்து பேசுகையில், சுடுமண் பொருட்கள் என்பவை களிமண்ணால் தேவையான பொருட்கள், அணிகலன்கள், சிற்பங்கள் செய்து பக்குவமாக உலர வைத்துச் சூளை போன்ற முறையில் சுட்டெடுத்து செய்யப்படும் உறுதியான பொருட்களாகும். அவ்வகையில் செய்யப்படும் சிற்பங்களும், பாண்டங்களும் எளிதில் தேயாது. துரு ஏறாது. அவற்றில் பல்வகை வண்ணங்களைப் பூசுவர். சுடுமண் சிற்பங்கள் இந்தியாவில் தொன்று தொட்டுச் செய்யப்பட்டு வருகின்றன. தமிழகத்திலும் சுடுமண் சிற்பங்கள் செய்யப்பட்டன. இன்றும் அவை வழக்கிலிருக்கின்றன. சுதைச் சிற்பங்கள் செய்து அவற்றிற்கு வண்ணம் தீட்டுவதும் தமிழகத்து மரபுகளில் ஒன்றாகும். மண்ணை தண்ணீருடன் ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் கலந்து உருவங்களை உருவாக்கி, பின் அதனை சூளையில் வேகவைத்து, பல்வேறு வடிவங்களைச் செய்யும் அபூர்வமான கலையாகும். பண்டைய காலங்களில் மண்ணில் செய்யப் படும் அலங்காரப் பொருட்களை அணிவதில் பெண்கள் அதிகம் ஆர்வம் காட்டினர். பழங்காலத்தில் சுடுமண் பொம்மை, வட்டசில்லு, சுடுமண் புகைபிடிப்பான், சுடுமண் அகல் விளக்கு உள்ளிட்ட பல்வேறு சுடு மண்ணிலான பொருட்களை முன்னோர்கள் பயன்படுத்தியுள்ளனர்.
முன்னோர்கள் சுடுமண்ணால் ஆன காதணிகள் வட்ட வடிவம் மற்றும் தோடு போன்ற வடிவ அமைப்பினைக் கொண்ட காதணியின் மேற்புறத்தில் அழகாக கோட்டுருவம் போன்று வரையப்பட்டு அக்கால மக்களின் கலை நுணுக்கங்களை கையாண்டு உள்ளனர். இது குறித்து இளையோர்கள் வரலாற்று நூல்களைப் படித்து அறிந்து கொண்டு நமது முன்னோர்கள் பயன்படுத்திய பொருட்களை பாதுகாக்க வேண்டும் என்றார். புழங்கு பொருட்கள் சேகரிப்பாளர் விஜயகுமார், செயலர் குணசேகரன், சங்ககால நாணயங்கள் சேகரிப்பாளர் முகமது சபேர், பாலிமர் பணத்தாள்கள் சேகரிப்பாளர் இளம்வழுதி , பழங்கால பொருட்கள் சேகரிப்பாளர் பத்ரிநாராயணன் உட்பட பலர் தனது சேகரிப்பு பொருட்களை காட்சிப்படுத்தி விளக்கினர். கல்லூரி கல்விப்புல முதன்மையர், துறைத்தலைவர்கள் , பேராசிரியர்கள், இணை பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள், இளங்கலை முதுகலை மாணவ மாணவிகள் உட்பட பலர் கண்காட்சியினை பார்வையிட்டனர்.


Comments are closed.