முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி சட்ட விரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில், அமலாக்கத்துறையால் கடந்தாண்டு ஜூன் மாதம் 14 ம் தேதி கைது செய்யப்பட்டார். இதுவரை 58 முறைக்கும் மேல் அவருடைய காவல் நீட்டிக்கப்பட்டு வரும் நிலையில், பலமுறை ஜாமின் கோரி அவர் அளித்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதனால் ஒராண்டுக்கும் மேலாக சிறையிலேயே காலம் தள்ளி வரும் அவர், பலமுறை உடல்நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். கைதான போதே மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சையிலிருந்த நிலையில், கடந்த ஆண்டு ஜூன் 21ம் தேதி அவருக்கு இதய அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் ஜாமின் கோரி செந்தில் பாலாஜி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். வழக்கின் இறுதி விசாரணை ஆகஸ்ட் 12 ஆம் நடைபெற்றது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்ததையடுத்து, செந்தில் பாலாஜி ஜாமின் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உச்சநீதிமன்றம் ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்தது. இந்த மனு மீதான விசாரணைகள் சுமார் 6 மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில், செந்தில் பாலாஜியின் ஜாமின் வழக்கில் இன்று காலை 10.30 மணிக்கு உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ் ஓகா, அகஸ்டின் ஜார்ஜ் அமர்வு செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து 471 நாட்கள் சிறையில் இருந்த செந்தில் பாலாஜி நாளை மாலை ஜாமீனில் வெளியே வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Comments are closed.