தி.மு.க. ஆட்சியில் ரூ.4 லட்சம் கோடி ஊழல்!
விசாரணை கமிஷன் அமைக்க எடப்பாடி பழனிசாமி மனு அளித்தார் !
தி.மு.க. ஆட்சியில் ரூ.4 லட்சம் கோடி ஊழல்!
விசாரணை கமிஷன் அமைக்க எடப்பாடி பழனிசாமி மனு அளித்தார் !
சென்னை கிண்டியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்தது தொடர்பாக அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்தார். தமிழக அமைச்சரவை கூட்டம் மற்றும் தமிழக சட்டசபை வருகிற ஜனவரி 20-ம் தேதி கூட உள்ள நிலையில் ஆளுநருடனான எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
திமுக ஆட்சியில் ரூ. 4 லட்சம் கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றுள்ளதாகவும், ஊழல் தொடர்பான ஆதாரங்களை அளித்து, அதுகுறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என்று மனு அளிக்கப்பட்டுள்ளது.
2021ம் ஆண்டு விடியா திமுக ஆட்சிக்கு வந்தது முதல் தமிழ்நாட்டில் நடத்திய ஊழல்களின் விவரங்களை இன்று (6.1.2026) மாண்புமிகு ஆளுநர் அவர்களுக்கு வழங்கினோம்.இன்றைய தினம் கடந்த நான்கரை ஆண்டுகளாக விடியா திமுக அரசின் ஊழல் நிறைந்த ஆட்சியில், துறைகள்தோறும்கொள்ளை அடிக்கப்பட்ட தொகைகளின் அளவு மற்றும் அதன் விவரங்களை மாண்புமிகு ஆளுநர் அவர்களிடம் வழங்கி, திமுக அரசு செய்த ஊழல்கள் அனைத்திற்கும் போதிய ஆதாரம் உள்ளதால், முழுமையான விசாரணை மேற்கொள்ள வலியுறுத்தினோம்.

கடந்த 56 மாதங்களாக, வெளித்தன்மை இல்லாமல், ஒரு கார்ப்பரேட் நிறுவனம் போல் அதிகார வர்க்கத்தின் உச்சத்தில் இருக்கும் திமுக குடும்பம் கோடிக்கணக்கில் கொள்ளையடித்தது. தமிழ்நாட்டை மிகப்பெரிய கடன் சுமையில் தள்ளியுள்ளது. இதை பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக சுட்டிக்காட்டுகிறோம்.திமுக கடந்த 56 மாதங்களாக வருடத்திற்கு ஒரு லட்சம் கடன் வாங்கி, தமிழ்நாட்டை மிக கேவலமான வகையில் நிர்வாகம் செய்து, ஏற்கனவே இருந்த கடனை விட கூடுதலாக 4 லட்சம் கோடி கடனை அதிகரித்ததுதான் நிர்வாகத் திறனற்ற திமுக-வின் சாதனை.
ஆட்சிக்கு வந்த ஒரு வருடத்திலேயே விடியா திமுக அரசு கொள்ளையடித்த 30 ஆயிரம் கோடி ரூபாய்களை மகனும், மருமகனும் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருவதாக அப்போதைய நிதி அமைச்சர் திரு. பழனிவேல் தியாகராஜன் தெரிவித்ததை நீங்களே அறிவீர்கள்.ஒரு ஆண்டுக்கே இவ்வளவு என்றால், இந்த நான்கரை ஆண்டுகளில் எவ்வளவு கொள்ளை அடித்திருப்பார்கள் என்று நீங்களே கணக்கிடுங்கள். ஊழல் செய்ததை தவிர இவர்கள் தமிழக மக்களுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை.விஞ்ஞான முறையில் ஊழல் செய்யக்கூடிய கட்சி திமுக. அந்த வகையில் அரசின் துறைகள்தோறும் மிக அதிக அளவில் ஊழல் செய்து தமிழக மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.
உதாரணத்திற்கு:
ஊழல் பட்டியல் துறை வாரியாக,துறை தொகை;
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் 64,000 கோடி ஊழல் நடந்துள்ளது.ஊரக வளர்ச்சி (ம) பஞ்சாயத்து ராஜ் துறையில் 60,000 கோடி ஊழல் நடந்துள்ளது. சுரங்கம் மற்றும் கனிம வளத் துறையில் 60,000 கோடி ஊழல் நடந்துள்ளது. எரிசக்தி துறையில் 55,000 கோடி ஊழல் நடந்துள்ளது. கலால் வரி (டாஸ்மாக்) 50,000 கோடி, பத்திரப்பதிவுத் துறை 20,000 கோடி, நெடுஞ்சாலைத்துறையில் 20,000 கோடி ஊழல் நடந்துள்ளது. நீர் ஆதாரத் துறையில் 17,000 கோடி ஊழல் நடந்துள்ளது. சென்னை மாநகராட்சி 10,000 கோடி ஊழல் நடந்துள்ளது. தொழிற் துறையில் 8,000 கோடி ஊழல் நடந்துள்ளது. பள்ளிக் கல்வித்துறையில் 5,000 கோடி ஊழல் நடந்துள்ளது. மக்கள் நல்வாழ்வுத் துறையில் 5,000 கோடி ஊழல் நடந்துள்ளது. வேளாண்மைத் துறையில் 5,000 கோடி ஊழல் நடந்துள்ளது. சமூக நலத்துறையில் 4,000 கோடி ஊழல் நடந்துள்ளது. உயர் கல்வித்துறையில் 1,500 கோடி ஊழல் நடந்துள்ளது. இந்து சமய அறநிலையத்துறையில் 1,000 கோடி ஊழல் நடந்துள்ளது.ஆதி திராவிடர் நலன் துறையில் 1,000 கோடி ஊழல் நடந்துள்ளது. சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறையில் 750 கோடி ஊழல் நடந்துள்ளது. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறையில் 500 கோடி ஊழல் நடந்துள்ளது.சிறைத் துறையில் 500 கோடி ஊழல் நடந்துள்ளது. சுற்றுலாத் துறையில் 250 கோடி ஊழல் நடந்துள்ளது. பால் வளத்துறையில் 250 கோடி ஊழல் நடந்துள்ளது.அரசு துறைகள்தோறும் கொள்ளையடிப்பது எப்படி என்பதிலேயே திமுக குறியாக இருந்ததால், ஆட்சி நிர்வாகம் சீராக இல்லாமல் சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்தது. மக்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லை. தமிழகத்தில் தொழில் துவங்க வந்த முதலீடுகள் அண்டை மாநிலங்களுக்கு சென்றுவிட்டன.ஊழல் செய்யும் திமுக-ஆட்சியாளர்களுக்கு துணையாக இருக்கும் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.நாங்கள் சமர்ப்பித்துள்ள திமுக ஆட்சியின் 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் பட்டியல்களை ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் மூலம் ஊழல் எவ்வாறெல்லாம் நடந்துள்ளது என்பதை விரிவாக விசாரித்து, ஊழல் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தப்பட்டது.


Comments are closed.