தமிழகத்தில் வரும் அக்டோபர் 6 ஆம் தேதி நடைபெற இருந்த ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு தமிழ்நாடு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. 58 இடங்களில் பேரணி நடத்த அனுமதி கேட்ட நிலையில், விதிமுறைகளை மீறியதாக அனுமதி மறுக்கப்பட்டது என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஜயதசமியை முன்னிட்டு அக்டோபர் 6 ஆம் தேதி அணி வகுப்பு நடத்த அனுமதிகோரி ஆர்.எஸ்.எஸ் அமைப்பு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. வழக்கு விசாரணை வந்தபோது அரசு தரப்பில் அணி வகுப்புக்கு அனுமதிகோரி ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் அளித்த மனுக்களை பரிசீலித்து வருவதாகவும், செப் 29 ஆம் தேதிக்குள் முடிவெடுத்து தெரிவிக்கப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. நீதிமன்ற உத்தரவுப்படி விதிமுறைகள் வகுக்கப்பட்ட பின்னரும் அணி வகுப்புக்கு காவல்துறை அனுமதி வழங்கவில்லை என குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
அனுமதி வழங்குவதில் ஏன் தாமதம் என கேள்வி எழுப்பிய நீதிபதி வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார். அதற்கு முன்பாக, அனுமதிகோரிய விண்ணப்பங்கள் மீது பரிசீலித்து முடிவுகளை அறிக்கையாக தெரிவிக்க காவல்துறைக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர். இந்நிலையில் தமிழகத்தில் 58 இடங்களில் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு தமிழக காவல்துறையால் அனுமதி மறுக்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது. குறிப்பாக வகுக்கப்பட்ட விதிமுறைகள் மீறியதால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயர் நீதிமன்றத்தில் அனுமதி குறித்து பதில் அளிப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Comments are closed.