தகுதித் தோ்வில் வெற்றி பெற்ற ஆசிரியர்களை பணி நியமனம் செய்யக்கோரி திருச்சியில் ஆர்ப்பாட்டம்!
தமிழக அரசு வழங்கும் ஆசிரியா் நியமனங்களில், 2013-ஆம் ஆண்டு தோ்ச்சி பெற்று 11 ஆண்டுகளாக வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் 40 ஆயிரம் ஆசிரியா்களையும் கணக்கில் எடுத்துக்கொண்டு பணி நியமனம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, 2013 ஆம் ஆண்டு ஆசிரியா் தகுதி தோ்வில் தோ்ச்சி பெற்ற சுமாா் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியா்கள் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தரையில் அமா்ந்து தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.
போராட்டத்திற்க்கு மாநில ஒருங்கிணைப்பாளா் இளங்கோவன் தலைமை வகித்தாா். மாநில தலைவா் வடிவேல் சுந்தா், மாநில செயலாளர் சண்முகப்பிரியா ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநில பொருளாளா் ஹரிஹரசுதன், மாநில அமைப்பாளா் ஸ்ரீதா், மாநில பொறுப்பாளா் ஏகாம்பரம், வடிவேல் உள்ளிட்ட நிா்வாகிகள் கண்டன உரையாற்றினா்.
தொடர்ந்து மாநில ஒருங்கிணைப்பாளா் இளங்கோவன் செய்தியாளர்களிடம் பேசுகையில்….
2013 ஆம் ஆண்டு தமிழக அரசு நடத்திய ஆசிரியா் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற்று காத்திருக்கும் 40 ஆயிரம் ஆசிரியா்களையும் பணி நியமனம் செய்ய வேண்டும். தோ்ச்சி பெற்று காத்திருப்பவா்களுக்கு இன்னொரு நியமனத் தோ்வு என்ற அரசாணையை ரத்து செய்ய வேண்டும். வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் எங்களை மாதம் ரூ. 10 ஆயிரம் தொகுப்பு ஊதியத்தில் நியமித்தாலும் பணியாற்ற சம்மதம் தெரிவிக்கிறோம். தமிழக முதல்வா் எங்கள் பிரச்னையில் தனி கவனம் செலுத்தி விரைவில் எங்களுக்கு ஆசிரியா் பணி வழங்க வேண்டும் என்றாா். இந்தப் போராட்டத்தில், மாநிலம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கானோா் கலந்து கொண்டனா்.