டிசம்பர் 20- ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெல்லை வருகை!
57 கோடி ரூபாய் மதிப்பில் 13 ஏக்கரில் 54 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ள, பொருநை அருங்காட்சியம் கட்டிடத்தை, திறந்து வைக்கிறார்.
டிசம்பர் 20- ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெல்லை வருகை!
57 கோடி ரூபாய் மதிப்பில் 13 ஏக்கரில் 54 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ள, பொருநை அருங்காட்சியம் கட்டிடத்தை, திறந்து வைக்கிறார்.
நெல்லையில் பேட்டி அளித்த, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தகவல்.

திருநெல்வேலி,நவம்பர் 28:-
திருநெல்வேலியில், மொத்தம் 56 கோடியே, 60 லட்சம் ரூபாய் மதிப்பில், 13 ஏக்கரில், 54 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள உலகத்தரம் வாய்ந்த, “பொருநை அருங்காட்சியகம்” கட்டுமான பணிகளை, நகர்ப்புற உள்ளாட்சித் துறை மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என். நேரு, நேற்று ( நவம்பர். 28) காலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா சுகுமார், பாளையங்கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மு. அப்துல் வகாப், நெல்லை மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் மோனிகா ராணா, மேயர் கோ. ராம கிருஷ்ணன், துணை மேயர் கே. ஆர். ராஜூ, முன்னாள் சபாநாயகர் இரா. ஆவுடையப்பன் ஆகியோர் முன்னிலையில், நேரில் பார்வையிட்டு “ஆய்வு” செய்தார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், கூறியதாவது:-
“திருநெல்வேலியில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள, “பொருநை அருங்காட்சியம்” கட்டிடத்தை அடுத்த மாதம் ( டிசம்பர்) 20-ஆம் தேதி “தமிழ்நாடு முதலமைச்சர்” மு.க.ஸ்டாலின், நேரில் வந்து திறந்து வைக்க உள்ளார். அருங்காட்சியகத்தின் கட்டுமானப் பணிகள் முழுமையாக நிறைவடைந்து விட்டன தற்போது, அங்கு பழங்கால பொருட்களை, காட்சிப்படுத்தும் பணிகள் (Artifacts placement) துரிதமாக நடைபெற்று வருகின்றன. முதலமைச்சர் வருவதற்குள், 100 சதவீதம் பணிகளும், நிறைவு பெற்று விடும். பாளையங் கோட்டை ஹைகிரவுண்ட் பகுதியில், சுமார் 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ள, அரசு மருத்துவக் கல்லூரி கூடுதல் கட்டிடத்தையும், முதலமைச்சர் திறந்து வைக்க உள்ளார். திருநெல்வேலி மாவட்டத்தில் 831 ஊரகக் குடியிருப்புகளுக்கான கூட்டுக்குடிநீர் திட்டப் பணிகள் நிறைவடைய, இன்னும் 15 முதல் 20 நாட்கள் வரை தேவைப்படுகிறது என்பதால், அப்பணிகள் முழுமையாக முடிந்த பிறகு, தனியாக அவற்றிற்கான திறப்பு விழா வைக்கப்படும். தமிழகத்தில், கிராமப்புற சாலைகளை சீரமைக்க முதலமைச்சரிடம் நிதி கேட்கப்பட்டுள்ளது. இதற்கான மதிப்பீடுகள் தயார் செய்யப்பட்டு வருகின்றன. இருப்பினும், அதற்கிடையே பழுதுபட்டுள்ள சாலைகளை, தற்காலிகமாக சீரமைப்பதற்காக (Patch work) நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நெல்லை மாநகராட்சியில், பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள், முழுமையாக முடிந்த பிறகே, புதிய சாலைகள் போடப்படும். அதுவரையிலும், மக்கள் சிரமப்படாமல் இருக்க வேண்டும் என்பதற்காக, ‘வெட் மிக்ஸ்’ (Wet mix) போடப்பட்டு, மேடு பள்ளங்கள் சரி செய்யப்படும். அவசரப்பட்டு, சாலைகளை போட்டுவிட்டு, மீண்டும் தோண்டுவதை தவிர்க்கவே, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப் படுகிறது. சென்னை மற்றும் பிற மாநகராட்சிகளை போலவே, நெல்லையிலும் கழிவுநீரை சுத்திகரித்து (STP) மறுசுழற்சி செய்யும் திட்டங்கள் செயல்படுத்தப்படும். தற்போதுள்ள 50 எம்.எல்.டி (MLD) சுத்திகரிப்பு நிலையத்தை, மேலும் விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எந்தவொரு நீர்நிலையிலும், கழிவுநீர் கலக்காதவாறு தடுப்பதற்காக, விரிவான திட்ட அறிக்கை (DPR) தயார் செய்யப்பட்டு வருகிறது. கோவையில் பெரியார் மாளிகை மற்றும் திருச்சியில் காமராஜர் அரங்கம் போல, நெல்லையில் காயிதே மில்லத் மணிமண்டபம் மற்றும் நூலகம் அமைக்கும் பணிகள், விரைவுபடுத்தப் பட்டுள்ளன. சென்னையில் மழைநீரை, உடனுக்குடன் வெளியேற்றுவதற்காக, 100 முதல் 150 டிராக்டர் மோட்டார்கள் மற்றும் உயர் திறன் கொண்ட மோட்டார்கள் தயார் நிலையில், வைக்கப்பட்டுள்ளன.
அங்கு, சுரங்கப் பாதைகளில் தேங்கும் நீரை, உடனுக்குடன் அப்புறப்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னையை பொறுத்தவரை, மழைநீர் வடிகால் பணிகள், பெரும்பாலான இடங்களில், முடிந்துவிட்டன. பல ஆண்டுகளாக தூர்வாரப்படாத விருகம்பாக்கம், ரெட்டேரி உள்ளிட்ட முக்கியக் கால்வாய்கள் தூர்வாரப்பட்டுள்ளன. 15 முதல் 20 சென்டிமீட்டர் மழை பெய்தாலும் கூட, மழைநீரானது 4 முதல் 5 மணி நேரத்திற்குள், வடிந்து விடும் வகையில், அதன் கட்டமைப்பு உள்ளது. வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கைகளை கருத்தில் கொண்டு, அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், தமிழக அரசு முறையாக எடுத்துள்ளது!” – இவ்வாறு அமைச்சர் கே.என். நேரு, நிருபர்களிடம் தெரிவித்தார். அப்போது, மாவட்ட வருவாய் அலுவலர் மு. துரை, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ந. சரவணன், கண்காணிப்பு பொறியாளர் SRI தரன், தொல்லியல் துறை இணை இயக்குநர் யதீஷ் குமார் ( தொழில் நுட்பம்) செயற்பொறியாளர் ஜோசப் ரன்சட் பெரஸ்,திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் “முனைவர்” ம.கிரகாம் பெல், வள்ளியூர் வடக்கு ஒன்றிய திமுக பொறுப்பாளர் அலெக்ஸ் அப்பாவு ஆகியோர் உடனிருந்தனர்.
திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் “மேலப்பாளையம்” ஹஸன்.


Comments are closed.