திருச்சி மாநகர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் 2024-25 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் விளக்க கருத்தரங்கம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள அஜந்தா ஹோட்டலில் நேற்று நடைபெற்றது. திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் ராஜசேகரன் தலைமையில் நடைபெற்ற இந்த கருத்தரங்கில் மாவட்ட பொதுச் செயலாளர்கள் ஒண்டி முத்து, காளீஸ்வரன், செல்வதுரை மற்றும் சிந்தனையாளர் பிரிவு மாநில செயலாளர் ஸ்ரீராம் ஆகியோர் முன்னிலை வைத்தனர். மேலும் மாநில துணை தலைவர் கனகசபாபதி, தொழில் பிரிவு மாநில பார்வையாளர் அசோக் சுந்தரேசன் ஆகியோர் கலந்து கொண்டு பட்ஜெட் குறித்து விளக்க உரையாற்றினர். இதில் மாநில மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து மாநிலத் துணைத் தலைவர் கனகசபாபதி செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அதில்….
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் 2024-25 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் வளர்ச்சிக்கான பட்ஜெட். கடந்த 10 ஆண்டுகளில் பாஜக அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டுகளால் நாட்டின் வளர்ச்சிக்கான அஸ்திவாரம் வலுவாக அமைக்கப்பட்டுள்ளது.
சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களை மேம்படுத்த முத்ரா திட்டத்தில் 48 கோடி பேருக்கு ரூ.29 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. இதில், தமிழகத்தில் மட்டும் 4 கோடி பேர் பயனடைந்துள்ளனர்.
மத்திய அரசின் திறமையான நிதி நிர்வாகத்தால், நிதி பற்றாக் குறை 5 சதவீதத்திற்கும் கீழாக குறைந்துள்ளது. இது, பாஜக ஆட்சிக்கு வரும்போது 9.2 சதவீதமாக இருந்தது. மாநில அரசுகளுக்கு ரூ.23 லட்சம் கோடி நிதி வழங்கப்பட உள்ளது. இது கடந்தாண்டை விட ரூ.2.5 லட்சம் கோடி அதிகமாகும்.
இதன் மூலம் ஒட்டுமொத்த பொருளாதாரமும், மக்களின் வாழ்க்கை தரமும் மேம்படும். தமிழகத்திற்கு, கடந்த 10 ஆண்டுகளில் பல்வேறு திட்டங்களுக்காக ரூ.10 லட்சத்து 76 ஆயிரம் கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்திற்கு மட்டும், 75 லட்சத்து 32 ஆயிரம் பேருக்கு குடிநீர் இணைப்புகளும், ஆயிரம் மக்கள் மருந்தகங்கள் வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகள் ஊக்கத்தொகை 4 லட்சம் பேருக்கு கிடைக்கிறது. இதில் தமிழக அரசின் ஒத்துழைப்பு இல்லாததால் 21 லட்சம் பேருக்கு வழங்க முடியாத சூழ்நிலை உள்ளது.
தமிழக ரயில்வே திட்டங்களுக்கு இந்தாண்டு ரூ.6 ஆயிரத்து 362 கோடி வழங்கப்பட்டுள்ளது. தமிழகம் முதல் 2 இடங்களில் உள்ள மொபைல் போன் உற்பத்தி, ஏற்றுமதி, மின்சார வாகனங்கள் உற்பத்தி துறையில் ஏராளமான சலுகைகள் மத்திய அரசால் தமிழகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு தமிழகத்தை புறக்கணிக்கிறது, பட்ஜெட்டில் அதன் பெயர் குறிப்பிடப்படவில்லை என்று கூறுவது நகைப்புக்குரியது. தமிழக அரசின் பட்ஜெட் எப்படி அனைத்து மாவட்டங்களுக்கும் பொதுவானதோ, அதுபோல மத்திய அரசின் பட்ஜெட் இந்தியாவின் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கும் பொதுவானதாகும்.
மாநில அரசுகள், ரூ.83 லட்சத்து 30 ஆயிரம் கோடி கடன் நிலுவை வைத்துள்ளன. இதில் தமிழக அரசு மட்டும் 10 சதவீதம் கடனாக ரூ.8 லட்சத்து 35 ஆயிரம் கோடி செலுத்த வேண்டியுள்ளது.
உலகில் விலைவாசி உயர்வு குறைவாக உள்ள நாடு இந்தியா தான். எனினும், அவற்றையும் மேலும் குறைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. நிலக்கரியை பயன்படுத்தி பாய்லர்களை சுற்றுச்சூழல் மாசு இல்லாமல் தயாரிப்பதில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு எடுத்த நடவடிக்கையால், கடந்த நவம்பர் மாதம் முதல் இப்போது வரை 7 மாதங்களில் திருச்சி பெல் நிறுவனத்துக்கு ரூ.43 ஆயிரம் கோடி ஆர்டர்கள் கிடைத்துள்ளது.
அடுத்த 7 ஆண்டுகளில் நிறைய ஆர்டர்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம் திருச்சியில் மீண்டும் சிறு, குறு தொழிற்துறை மறுமலர்ச்சி ஏற்படும் என தெரிவித்தார்.