- Advertisement -

மணப்பாறை அருகே தனியார் ஆம்னி பேருந்து 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்து தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு – அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்!

- Advertisement -

சென்னை, கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து நேற்று மாலை கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் நோக்கி தனியார் ஆம்னி பேருந்து ஒன்று புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. இதில் இரண்டு ஓட்டுநர்கள் மற்றும் 39 பயணிகள் என மொத்தம் 41 பேர் பயணம் செய்துள்ளனர். பேருந்தை ஓட்டுனர் ராஜா என்பவர் ஓட்டிச் சென்ற நிலையில் நள்ளிரவு சுமார் 1.15 மணியளவில் திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே சென்னை – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் யாகபுரம் என்ற இடத்தில் பேருந்து சென்று கொண்டிருந்தபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த தடுப்பு கட்டையை தாண்டி அங்கிருந்த மின் கம்பத்தை உடைத்துக் கொண்டு சுமார் 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.

பேருந்து கவிழ்ந்த வேகத்தில் திடீரென தீப்பற்ற தொடங்கிய நிலையில் பேருந்தில் இருந்த ஓட்டுனர்கள் மற்றும் பயணிகள் அலறி அடித்துக் கொண்டு ஜன்னல் கண்ணாடிகளை உடைத்துக் கொண்டு வெளியேறி உள்ளனர். அக்கம் பக்கத்தில் வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்தவர்களும் சத்தம் கேட்டு ஓடி வந்து பேருந்தில் இருந்த பயணிகளை உடனடியாக மீட்டுள்ளனர்.‌

Bismi

பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேறிய நிலையில் பேருந்தில் பற்றிய தீ மளமளவென கொழுந்து விட்டு எரிய தொடங்கியது. இதுகுறித்து தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த துவரங்குறிச்சி தீயணைப்புத்துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து சுமார் இரண்டு மணி நேரம் போராடி தீயை முற்றிலுமாக அனைத்தனர். இருப்பினும் பேருந்து முழுவதும் எரிந்து நாசமானது.

Vagai

பேருந்து மின்கம்பத்தில் மோதிய வேகத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இச்சம்பவத்தில் பேருந்தின் ஓட்டுனர்கள் ராஜா, பாபு மற்றும் பயணிகள் என மொத்தம் 15 பேர் காயம் அடைந்தனர். அனைவரும் துவரங்குறிச்சி அரசு மருத்துவமனை மற்றும் மணப்பாறையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

இவ்விபத்தால் சென்னை – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இச்சம்பவம் குறித்து துவரங்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்