கனமழை காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 15 ஆம் தேதி தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இத்தகைய சூழலில் தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதே சமயம் தென்மேற்கு வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், 8 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வந்தது. இந்நிலையில், கடந்த 6 மணி நேரத்தில் 10 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருவதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் சின்னம் நாகையில் இருந்து 470 கி.மீ தொலைவிலும், சென்னையில் இருந்து 670 கி.மீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இதனையொட்டி கடலூர், மயிலாடுதுறையில் இன்று (27.11.2024) அதி கனமழைக்கான வாய்ப்பு உள்ளதால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் மிக கன மழைக்கு வாய்ப்பு உள்ளது. எனவே ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் கனமழை எதிரொலியாகத் திருவள்ளூர், விழுப்புரம், திருவாரூர், திருச்சி, கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் செயல்படும் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (27.11.2024) ஒரு நாள் மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, அரியலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (27.11.2024) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (27.11.2024) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற இருந்த பருவத் தேர்வுகள் கனமழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இந்த தேர்வுகளுக்கான மாற்றுத்தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனப் பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்