காவிரி தாய்க்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் 18 ஆம் தேதி ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படுகிறது. காவிரி வரும் ஒகேனக்கல் முதல் கடலில் சங்கமிக்கும் பூம்புகார் வரை காவிரி கரையோரங்களில் ஆடிப்பெருக்கு விழா வெகு சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். இதனை தொடர்ந்து திருச்சியில் அம்மா மண்டபம், கருடமண்டபம், கீதாபுரம், ஓடத்துறை, அய்யாளம்மன் படித்துறை உள்ளிட்ட படித்துறைகளில் ஆடிப்பெருக்குவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு திருச்சி அம்மாமண்டபம் படித்துறையில் பக்தர்கள் அதிக அளவில் குவிந்துள்ளனர்.
மேலும் படித்துறையில் வாழை இலை விரித்து அதில் மஞ்சள் பிள்ளையார் வைத்து, தேங்காய், அரிசி, வெல்லம், பழ வகைகள் உள்பட மங்கல பொருட்களை படையலிட்டு பூஜை செய்தனர். பின்னர் காவிரி ஆற்றுக்கு தீபாராதனை காட்டி வழிபட்டனர். சுமங்கலி பெண்கள் ஒருவருக்கொருவர் மஞ்சள் கயிற்றை கழுத்தில் கட்டி கொண்டனர். திருமணமாகாத இளம்பெண்களும் தங்களுக்கு திருமணம் நடக்க வேண்டி கையில் மஞ்சள் கயிறு கட்டிக்கொண்டனர். மேலும் கணவருக்கு நீண்ட ஆயுளும், நீடித்த செல்வமும் வழங்க வேண்டும் என்று சுமங்கலி பெண்கள் அனைவரும் காவிரித்தாயை பிரார்த்தித்து, தங்களது தாலியை பிரித்து புதுத்தாலியை கட்டிக் கொண்டனர். மேலும் காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்களுக்கு வெள்ள அபயா எச்சரிக்கை விடுக்கபட்டுள்ளது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பதால் பொதுமக்கள் கரையோரங்களில் சென்று குளிக்கவோ, துணி துவைக்கவோ மற்றும் புகைப்படங்கள் எடுப்பது, ரீல்ஸ் வீடியோ எடுப்பது போன்ற எந்த விதமான தவறான செயலிலும் ஈடுபடக் கூடாது என மாவட்ட நிர்வாகம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.