நடிகர் சங்கத்திற்கு கட்டடம் கட்ட 1 கோடி நிதி வழங்கிய அமைச்சர் உதயநிதி!
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, தலைவர் நாசர், துணை தலைவர்கள் பூச்சி முருகன், கருணாஸ் உள்ளிட்டோர் நடிகரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்தனர். அப்போது நடிகர் சங்க கட்டடம் கட்டிக் கொள்ள ரூ.1 கோடி நிதியை அவர்களுக்கு வழங்கினார். இந்தப் பணம் நடிகர் சங்க கட்டடம் கட்ட பயன்படுத்தப்பட உள்ளது.
இது குறித்து ட்விட்டர் எக்ஸ் சமூக வலைதளத்தில் உதயநிதி ஸ்டாலின், ‘தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு சொந்தக் கட்டடம் வேண்டும் என்பதற்காக நடிகர் சங்க நிர்வாகிகள் தொடர் முயற்சிகளை எடுத்து வருகின்றனர். சங்கத்தின் ஆயுட்கால உறுப்பினர் என்ற முறையில், நடிகர் சங்க கட்டடப் பணிகளை தொடங்குவதற்கான வைப்பு நிதிக்காக, நமது சொந்த நிதியிலிருந்து, ரூ.1 கோடிக்கான காசோலையை நடிகர் சங்க நிர்வாகிகளிடம் இன்று வழங்கினோம்.
தமிழ்நாட்டு திரைக் கலைஞர்களின் பல நாள் ஏக்கமாக உள்ள தென்னிந்திய நடிகர் சங்க கட்டடப்பணியை விரைந்து நிறைவு செய்ய வாழ்த்தினோம். மேலும், அவர்களின் கோரிக்கைப்படி இப்பணிக்கு கழக அரசு துணை நிற்குமென்று கூறினோம்’ எனத் தெரிவித்து உள்ளார்.