வரி செலுத்தாத கட்டடங்களுக்கு மாநகராட்சி கிடிக்கிப்பிடி!
சென்னை மாநகராட்சியின் வருவாயை அதிகரிக்கும் வகையில், சொத்து வரி வசூலிப்பில் மாநகராட்சி அதிரடி நடவடிக்கை மேற்கொள்ள உள்ளது. அதன்படி, பல ஆண்டு காலமாக வரி செலுத்தாத குடியிருப்பு, வணிக கட்டடங்களைக் கணக்கெடுத்து, ‘சீல்’ வைக்க, மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
சென்னை மாநகராட்சியில், நிதியாண்டுக்கு 1,000 கோடி ரூபாய்க்கு மேல் சொத்து வரி வசூலிக்கப்பட்டது. 1998ம் ஆண்டுக்குப் பின், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, 2018ல் மாநகராட்சி சொத்து வரி உயர்த்தப்பட்டது.அதன்படி, குடியிருப்பு கட்டடங்களுக்கு 50 சதவீதமும், வணிக பயன்பாட்டு கட்டடங்களுக்கு 100 சதவீதமும் உயர்த்தப்பட்டது.
பல்வேறு இடங்களில், உயர்த்தப்பட்ட வரி பல மடங்கு இருப்பதாகக் கூறி, சொத்து உரிமையாளர்கள் மாநகராட்சியில் மேல்முறையீடு செய்தனர். ஒரே பகுதியில், ஒரே அளவிலுள்ள குடியிருப்புக்கு மாறுபட்ட சொத்து வரி உள்ளிட்டவை விதிக்கப்பட்டதால், பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியது.
எனவே, உயர்த்தப்பட்ட சொத்து வரியை, ஒன்றரை ஆண்டுகளில் தமிழக அரசு திரும்பப் பெற்றது. மேலும், சொத்து உரிமையாளர்கள் பழைய வரியை செலுத்தும்படி அறிவுறுத்தப்பட்டது. உயர்த்தி செலுத்தப்பட்ட சொத்து வரி, அடுத்தடுத்த ஆண்டுகளில் வரவு வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
சென்னை மாநகராட்சியில் ஏற்கனவே, 2 லட்சம் சொத்து உரிமையாளர்களுக்கு, வரி குறைத்து மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதனால், மாநகராட்சிக்கு ஆண்டுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. அவற்றுடன், உயர்த்தப்பட்ட சொத்து வரியும் திரும்பப் பெறப்பட்டதால், மாநகராட்சி வருவாய் இழப்பு, 500 கோடிக்கு மேல் உள்ளது.
இந்நிலையில், உயர்த்தப்பட்ட சொத்து வரியும் திரும்பப்பெறப்பட்டதால், கடந்த இரண்டு ஆண்டுகளில் மாநகராட்சியின் சொத்து வரி வருவாய் பெருமளவு குறைந்தது.அதன்படி, கடந்த இரண்டு நிதியாண்டுகளில், தலா 650 கோடி ரூபாய் என்ற அளவில், சொத்து வரி வசூலிக்கப்பட்டது. 2021 – 22ம் நிதியாண்டில், மாநகராட்சியின் சொத்து வரி 750 கோடி ரூபாயாகவும், தொழில் வரி 450 கோடி ரூபாயாகவும் வசூலிக்க, இலக்கு நிர்ணயித்தது.
திட்டமிடல்
இந்த நிதியாண்டு முடிய இரண்டு நாட்களே உள்ள நிலையில், 718 கோடி ரூபாய் சொத்து வரியும், 386 கோடி ரூபாய் தொழில் வரியும் வசூலிக்கப்பட்டுள்ளது. எனவே, சொத்து வரி மற்றும் தொழில் வரி வசூலிப்பில் அதிரடி நடவடிக்கை மேற்கொள்ள, மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
சென்னை மாநகராட்சி வரி வருவாயில், சொத்து வரி மற்றும் தொழில் வரி பிரதான ஒன்றாக உள்ளது. சென்னை மாநகராட்சியில் தற்போதைய சூழலுக்கு ஏற்ப சொத்து வரி உயர்த்தப்பட்டிருந்தால், ஆண்டுக்கு 1,200 கோடி ரூபாய்க்கு வருவாய் கிடைக்கும்.
சொத்து வரி உயர்த்தப்பட்டு திரும்பப்பெறப்பட்டதால், சொத்து வரி வசூல் குறைந்துள்ளது.
ஆனாலும், அனைத்து சொத்து உரிமையாளர்களும் முறையாக சொத்து வரி செலுத்தினால், ஆண்டுக்கு 1,000 கோடி ரூபாயாவது வருவாய் கிடைக்கும். பல சொத்து உரிமையாளர்கள், ஆண்டுக்கணக்கில் சொத்து வரி செலுத்தாமல் உள்ளனர்.
அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியும் தீர்வு இல்லை. ஆலோசனைஎனவே, மாமன்ற கூட்டத்தில் அனுமதி பெற்று, சொத்து வரி செலுத்தாத வீடுகள் மற்றும் நிறுவனங்கள் மீது, பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க ஆலோசித்து வருகிறோம். நீண்ட கால சொத்து வரி செலுத்தாத கட்டடங்களுக்கு ‘சீல்’ வைக்கப்படும்.
எனவே, மாநகராட்சியின் இதுபோன்ற நடவடிக்கையில் இருந்து தப்பிக்க, குறிப்பிட்ட கால அளவிற்குள் சொத்து வரியை செலுத்த மக்கள் முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
புவிசார் தொழில்நுட்பம்
சென்னை மாநகராட்சியின் ஆளில்லா விமானம் வாயிலாக, புவிசார் தொழில்நுட்ப வரைபடம் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கும், மாநகராட்சியில் உள்ள கட்டடங்கள், காலிமனைகள் குறித்த விபரங்களை உள்ளடக்கி, புவிசார் வரைபடம் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது.
இந்த வரைபடம் தயாரிக்கும் பணி, ஓரிரு மாதங்களில் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. புவிசார் வரைபடம் வாயிலாக, கட்டட தன்மை அளவுக்கு ஏற்ப சொத்து வரி மதிப்பீடு செய்து, சீராய்வு செய்ய மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
சலுகை உண்டு
சென்னை மாநகராட்சி முனிசிபல் சட்டம் 1919ன்படி, முதலாம் அரையாண்டுக்கான சொத்து வரியை, ஏப்., 15ம் தேதி, இரண்டாம் அரையாண்டுக்கு அக்., 15ம் தேதிக்குள் செலுத்தும் சொத்து உரிமையாளர்களுக்கு, நிகர சொத்து வரியில் 5 சதவீதம் அல்லது அதிகபட்சமாக 5,000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும். அந்த நாட்களைத் தாண்டி செலுத்தும் வரிகளுக்கு, ஆண்டுக்கு 2 சதவீத தண்ட தொகையுடன் சேர்த்து சொத்து வரி செலுத்த வேண்டும்.