தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மத வழிபாட்டுத் தலங்களில் எந்தவிதமான சர்ச்சைகளையும் ஏற்படுத்தாமல் பாதுகாக்க வேண்டும் என சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமது தெரிவித்துள்ளார்
ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 6 ஆம் தேதி பாபர் மசூதி இடிப்பு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்தியாவின் அடையாளமாக திகழ்ந்த 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாபர் மசூதி இடிக்கப்பட்டதை கண்டித்தும், ஆவணங்களின் அடிப்படையிலும், சட்டத்தின் அடிப்படையிலும் தீர்ப்புகள் வழங்கப்படாமல் ஒருதலைபட்சமாக வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்தும், இனி ஒரு பள்ளிவாசலை இடிக்க அனுமதிக்க கூடாது என்பதை வலியுறுத்தியும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் திருச்சி மரக்கடை பாஸ்போர்ட் அலுவலகம் அருகே இன்று பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திருச்சி கிழக்கு மாவட்ட தலைவர் முஹம்மது ராஜா தலைமை தாங்கினார். திருச்சி மேற்கு மாவட்ட தலைவர் பைஸ் அகமது வரவேற்புரை ஆற்றினார். தொடர்ந்து மணப்பாறை சட்டமன்ற உறுப்பினரும், மமக பொதுச் செயலாளருமான அப்துல் சமது கண்டன உரையாற்றினார். மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பாலக்கரை வட்டார ஜமாத்துல் உலமா தலைவர் முகமது சிராஜ்தீன் மன்பஈ, தமுமுக மாவட்ட செயலாளர்கள் இப்ராஹிம் ஷா, இலியாஸ், மமக மாவட்ட செயலாளர்கள் இப்ராஹிம், அஷ்ரப் அலி உள்பட மாவட்ட, பகுதி, வார்டு அணி நிர்வாகிகள் மற்றும் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் உள்பட 500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
ஆர்பாட்டத்திற்கிடையே சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமது செய்தியாளர்களிடம் பேசுகையில்…
இந்தியாவில் தேச பிதா காந்தியடிகளின் படுகொலைக்கு பிறகு, இந்தியாவில் நடைபெற்ற மிகப்பெரிய பயங்கரவாத செயல் பாபர் மசூதி இடிப்பாகும். பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாளான டிசம்பர் 6ஆம் தேதியை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் வருடம் தோறும் பயங்கரவாத எதிர்ப்பு நாளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் இந்த ஆண்டு தமிழ்நாடு முழுவதும் வழிபாட்டு தலங்களை பாதுகாக்க கோரி மக்கள் திரளால் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாபர் மசூதி வழக்கு மிக மோசமான, அநீதியான தீர்ப்பாக அமைந்த போதிலும், இன்றைய நிலையில் இந்தியா முழுவதும் வழிபாட்டுத் தலங்களில் ஏற்படக்கூடிய பிரச்சனைகளை முஸ்லிம் சமுதாய மக்கள் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்.
1991-ல் வழிபாட்டு தலங்களின் சிறப்பு சட்டம் உருவாக்கப்பட்டது. இந்த சட்டம் கூறுவது என்னவென்றால் 1947 ,ஆகஸ்ட் 15 நாடு சுதந்திரம் அடைந்த பிறகு வழிபாட்டுத் தலங்கள் எப்படி இருக்கிறதோ அதேபோன்று அனைத்து மத வழிபாட்டு தலங்களும் செயல்பட வேண்டும். அதில் எந்தவிதமான சர்ச்சையையும் உருவாக்க கூடாது என்பதாகும். ஆனால் இந்த சட்டத்திற்கு புறம்பாக பல்வேறு வன்முறைகளும், முறைகேடுகளும் நடைபெற்று வருகிறது. ஆகையால் தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மத வழிபாட்டுத் தலங்களில் எந்தவிதமான சர்ச்சைகளையும் ஏற்படுத்தாமல் பாதுகாக்க வேண்டும் என்பதே எங்களுடைய முக்கிய கோரிக்கையாகும் என்றார்.