நடிகை திரிஷா குறித்து சர்ச்சை – மன்சூர் அலிகான் மனு தாக்கல்
நடிகை திரிஷா குறித்து சர்ச்சை – மன்சூர் அலிகான் மனு தாக்கல்
நடிகை திரிஷா பற்றி வில்லன் நடிகர் மன்சூர் அலிகான் தெரிவித்த கருத்துக்கள் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டன குரல்கள் எழுந்த நிலையில்.
தேசிய மகளிர் ஆணையம் மன்சூர் அலிகான் மீது உரிய நடவடிக்கை எடுக்க போலீஸ் டி.ஜி.பி.க்கு உத்தரவிட்டது. இதையடுத்து சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் மன்சூர் அலிகான் மீது தகுந்த சட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.
மன்சூர் அலிகான் மீது சென்னை ஆயிரம் விளக்கு மகளிர் போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். 354-ஏ, ஐ.பி.சி. (பெண்களின் உணர்வுக்கு குந்தகம் விளைவித்தல்), 509 ஐ.பி.சி. (பெண்களை இழிவுபடுத்தி பேசுவது) ஆகிய 2 சட்ட பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கு தொடர்பாக இன்ஸ்பெக்டர் தனலட்சுமி விசாரணை நடத்தி வருகிறார். இந்த 2 சட்டப் பிரிவுகளும் 2 ஆண்டுகள் வரையில் சிறை தண்டனை அனுபவிக்கக் கூடிய சட்டப் பிரிவுகளாகும்.
இதற்கிடையே, நுங்கம்பாக்கத்தில் உள்ள மன்சூர் அலிகான் வீட்டுக்குச் சென்ற போலீசார் நேற்று அவரது மனைவியிடம் சம்மன் அளித்தனர்.
இந்நிலையில், இன்று விசாரணைக்கு ஆஜராக போலீசார் சம்மன் அனுப்பியுள்ள நிலையில் மன்சூர் அலிகான் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.