அமைச்சர் செந்தில்பாலாஜி மனைவி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனு சென்னை உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகளில், நீதிபதி சக்திவேல் விலகியுள்ளார்.
அமைச்சர் செந்தில்பாலாஜி மனைவி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனு சென்னை உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகளில், நீதிபதி சக்திவேல் விலகியுள்ளார்.
அமைச்சர் செந்தில்பாலாஜி சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டுள்ளதாக கூறி, அவரது மனைவி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனுவை விசாரிக்கும் அமர்வில் இருந்த சென்னை உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகளில், நீதிபதி சக்திவேல் விலகியுள்ளார்.
சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத் துறையினரால், நேற்றிரவு கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில்பாலாஜி, நெஞ்சுவலி காரணமாக சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், தனது கணவரை அமலாக்கப் பிரிவினர் சட்டவிரோத காவலில் வைத்துள்ளதாகவும், அவரை விடுவிக்க உத்தரவிட வேண்டும் என்றும் செந்தில்பாலாஜியின், மனைவி மேகலா, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனுவை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என செந்தில்பாலாஜி மனைவி தரப்பில் திமுக எம்பியும், மூத்த வழக்கறிஞருமான என்.ஆர்.இளங்கோ, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் சுந்தர் மற்றும் சக்திவேல் ஆகியோர் அடங்கிய அமர்வில் புதன்கிழமை காலை முறையிட்டார்.
அப்போது, செவ்வாய்க்கிழமை காலை 7 மணி முதல் அமலாக்கப் பிரிவினர் செந்தில்பாலாஜியிடம் விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்த நிலையில், அவரை சட்டவிரோதமாக காவலில் வைக்கப்பட்டுள்ளார். மேலும், இந்தக் கைது நடவடிக்கையின்போது உரிய நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை. கைது குறித்து குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை. எனவே, இந்த வழக்கை அவசர வழக்காக இன்று பிற்பகல் விசாரணைக்கு எடுக்கவேண்டும் என கேட்டுக் கொண்டார்.
இந்த முறையீட்டை கேட்ட நீதிபதிகள், மனுவுக்கு எண்ணிடப்படும் நடைமுறைகளை முடித்து, நீதிமன்றத்தில் தெரிவித்தால், வழக்கு பிற்பகல் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனத் தெரிவித்திருந்தனர். இதையடுத்து, இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஒப்புதல் அளித்தார்.
இதையடுத்து, இந்த அவசர வழக்கு, உயர் நீதிமன்ற நீதிபதிகள் சுந்தர் மற்றும் சக்திவேல் ஆகியோர் அடங்கிய அமர்வில் பிற்பகலில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இரு நீதிபதிகள் அமர்வில் இருந்த நீதிபதி சக்திவேல், இந்த வழக்கை விசாரிப்பதில் இருந்து தான் விலகிக் கொள்வதாக தெரிவித்தார். இது தொடர்பாக எந்தக் காரணத்தையும் நீதிபதி நீதிமன்றத்தில் தெரிவிக்கவில்லை.
இதைத்தொடர்ந்து, மனுதாரர் தரப்பு வழக்கறிஞர்கள் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முன்பு முறையிட்டனர். அப்போது, தலைமை நீதிபதி, நீதிமன்ற நடைமுறைகளைப் பின்பற்றி புதிய அமர்வு அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.
இந்த புதிய அமர்வு எப்போது அமைக்கப்படும் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், இன்று மாலைக்குள் இது தொடர்பான அறிவிப்புகள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.