தமிழக அரசின் வணிக வரித்துறை அதிகாரிகள் சமீபகாலமாக ஸ்பாட்ஃபைன் (Spotfine) என்ற முறையை தீவிரமாக செயல்படுத்துவதால் வியாபாரிகள் மிகுந்த தொல்லைக்கு உள்ளாகிறார்கள்-எஸ்.டி.பி.ஐ. கட்சி

0

திருச்சியில் நடைபெற்ற எஸ்.டி.பி.ஐ. கட்சி வர்த்தகர் அணியின் முதல் மாநில மாநாடு

வணிகத்தை வளமாக்குவோம், வணிகர்களை பலமாக்குவோம் என்ற முழக்கத்துடன், மே- 5 இன்று வணிகர் தினத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் வர்த்தகர் அணி சார்பாக திருச்சியில் முதல் மாநில மாநாடு நடைபெற்றது.

எஸ்.டி.பி.ஐ. வர்த்தகர் அணியின் மாநில தலைவர் கிண்டி அன்சாரி தலைமையில், திருச்சி ஃபெமினா அரங்கில் நடைபெற்ற இந்த மாநாட்டில் மாநில பொதுச்செயலாளர் ஜாஃபர் அலி உஸ்மானி துவக்கவுரை நிகழ்த்தினார். மேலும், இந்த மாநாட்டில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில துணைத் தலைவர்கள் எஸ்.எம்.ரஃபீக் அகமது, அப்துல் ஹமீது, மாநில செயலாளர் ரத்தினம், வர்த்தகர் அணி மாநில துணைத் தலைவர்கள் கலீல் ரஹ்மான், பாத்திமா ஸ்டீல் முகைதீன், ஜோதி பேக் அஜ்மல் கான், மாநில பொருளாளர் அன்சர் குரூப் அப்துல் சமத், மாநில செயலாளர்கள் அப்துல் கரீம், அரபாத், லோகநாதன், கமால் பாட்ஷா, ஸலாஹூத்தீன், எஸ்.டி.பி.ஐ. மாநில செயற்குழு உறுப்பினர்கள் அம்ஜத் பாஷா, ஹஸ்ஸான் பைஜி, வர்த்தகர் அணி மாநில செயற்குழு உறுப்பினர்கள் சாதிக், சேக் சாலி, குடந்தை இப்ராஹீம், திருச்சி மாவட்ட தலைவர் அப்துல் மாலிக், திருச்சி தெற்கு மாவட்ட எஸ்.டி.பி.ஐ. தலைவர் முபாரக் அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த மாநாட்டில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக், ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு சிறப்புரை நிகழ்த்தினர். அதேபோல் மண்ணச்சநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.கதிரவன், விசிக துணைப் பொதுச்செயலாளர் வெ.கனியமுதன், மதிமுக மாநில மகளிர் அணி செயலாளர் டாக்டர் ரொக்கையா சேக் முகமது, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் எம்.பி. முத்து ரத்தினம், தொப்பி வாப்பா குழும நிறுவனர் உமர் முக்தார், BNI திருச்சி மூத்த இயக்குனர் நாகப்பா ஸ்டோர் இயக்குனர் திரு LN SP ரவி ராமசாமி ஆகியோரும் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர்.

மேலும், மாநாட்டில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், வர்த்தக பிரமுகர்கள், தொழில் அதிபர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு மாநாட்டை சிறப்பித்தனர். மாநாட்டில் தமிழகம் முழுவதிலிருந்தும் ஆயிரக்கணக்கான வர்த்தகர்கள் கலந்துகொண்டனர்.

இந்த மாநாட்டில் வணிகர்கள் நலன் சார்ந்து பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தீர்மானங்கள்:

1. இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகத் திகழ்வது சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களே (MSME-SECTORS). இந்தியாவிலேயே சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களின் வளர்ச்சியில் தமிழ்நாடு இரண்டாம் இடத்தில் உள்ளது. இதன்காரணமாக மத்திய, மாநில பொருளாதார கட்டமைப்பில் இந்த MSME-SECTORS தான் கணிசமான பங்கு வகிக்கிறது என்பதை எவராலும் மறுக்கமுடியாது. மத்திய அரசின் தவறான அதிகப்பட்ச வரிவிதிப்புக்கொள்கையால் இந்தத்துறை முழுமையாகவே சீரழிந்துவிட்டது. கொரோனா பெருந்தொற்று மற்றும் அதிகப்படியான ஜி.எஸ்.டி. வரிவிதிப்பால் சிறுகுறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பல்லாயிரக்கணக்கான உற்பத்தி நிறுவனங்கள் மூடப்பட்டும் பல லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பணி இழந்தும் இருப்பதால் இவர்களின் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகி விட்டது. அரசு இந்த துறையை தக்க வைப்பது மட்டுமல்ல, அடுத்த கட்டத்திற்கு வளர்த்தெடுக்க வேண்டிய பொறுப்பும் அரசுக்கு உள்ளது.

எனவே, ஒன்றிய அரசு ஜி.எஸ்.டி. மூலமாக பெறும் அதிக அதிகப்பட்ச வரிவிதிப்பை பரிவுடன் பரிசீலித்து மறுபரிசீலனை செய்து, குறைந்தபட்ச வரிஅமைப்பாக மாற்றி அமைத்து, நாட்டின் 60% சதவீதத்திற்கும் அதிகமான தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை செழுமைப்படுத்தித் தரும்படி இந்த மாநாடு கேட்டுக்கொள்கிறது.

மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்ட சிறுகுறு தொழில்களின் வங்கிக் கடன்களை ரத்து செய்வதோடு, அந்த துறையை பாதுகாக்க புதிய வங்கிக் கடன்களை எளிய முறையில் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இந்த மாநாடு வலியுறுத்துகின்றது.

- Advertisement -

2. தமிழக அரசின் வணிக வரித்துறை அதிகாரிகள் சமீபகாலமாக ஸ்பாட்ஃபைன் (Spotfine) என்ற முறையை தீவிரமாக செயல்படுத்துவதால் வியாபாரிகள் மிகுந்த தொல்லைக்கு உள்ளாகிறார்கள். உண்மையிலேயே வரி ஏய்ப்பு செய்யும் வணிக நிறுவனங்களை கண்டுணர்ந்து அவற்றின் மீது நடவடிக்கை மேற்கொள்வதில் தவறில்லை. ஆனால், முறையாக வரி செலுத்தும் வியாபார நிறுவனங்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கையாக சில அதிகாரிகள் வேண்டுமென்றே அபராதங்களை விதித்து வருகின்றார்கள். இது தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என இந்த மாநாடு கோருகிறது.

3. உணவகங்கள் மீதான தனிப்பட்ட பழிவாங்கும் நோக்கில், வேண்டுமென்றே உணவகங்கள் மீது உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்துவது அல்லது போலியான புகார்களின் பேரில் சோதனை செய்துவது, தவறான போலியான தகவல்களுடன் அதனை வேண்டுமென்றே சமூக வலைதளங்கள் மூலம் பரவச் செய்து அந்த உணவங்களுக்கு எதிராக பொதுமக்களிடம் செய்தியை கொண்டு சேர்ப்பது போன்ற சம்பவங்கள் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன. தவறு செய்யும் உணவங்கள் மீது நடவடிக்கைகள் மேற்கொள்வதில் யாருக்கும் எவ்வித ஆட்சேபனையும் கிடையாது. ஆனால், வேண்டுமென்றே அதனை பழிவாங்கும் நடவடிக்கையாக மேற்கொள்வதை தடுத்து நிறுத்த வேண்டும். அத்தகைய ஊடகங்களில் தகவல் பரப்பும் பாரபட்சமான அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், சமூக வலைதளங்களில் இதுகுறித்து தவறான தகவல்கள் பரப்புவோர் மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த மாநாடு அரசுக்கு கோரிக்கை விடுக்கிறது.

4. இந்தியாவில் சில்லரை வர்த்தகத்தில் சுமார் 20 கோடி பேர் ஈடுபட்டு வருகின்றனர். இதன்மூலம் சுமார் 40 கோடி பேர் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர். ஆன்லைன் வர்த்தகத்தால் சில்லரை வர்த்தகர்கள் மட்டுமின்றி கோடிக்கணக்கான தொழிலாளர்களும் பாதிக்கப்படுகின்றனர். ஆன்லைன் வர்த்தகர்கள் பொருட்களை வாங்கி கூடுதலாக இருப்பு வைப்பதால் சந்தைகளில் பொருட்களுக்கு செயற்கை தட்டுப்பாடு ஏற்படுகிறது. இதனால் சில்லரை வர்த்தகர்களுக்கு கடும் பாதிப்பு ஏற்படுகிறது. ஆகவே, ஆன்லைன் வர்த்தகத்தை முறைப்படுத்தி சில்லரை வணிகத்தை பாதுகாக்க வேண்டும். ஆன்லைன் வர்த்தகத்தால் பாதிக்கப்படும் சில்லரை வணிகர்களை காக்க ஆண்டுக்கு ஒரு கோடிக்கு வணிகம் செய்பவர்களுக்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என இந்த மாநாடு வலியுறுத்துகிறது.

5. அரசுத் துறைகளுக்கான தேவைப்படும் பொருட்களின் மொத்த கொள்முதலில், சிறுகுறு தொழில்கள் மேற்கொள்ளும் நலிவடைந்த முஸ்லிம், கிறித்தவ சிறுபான்மை சமூக நிறுவனங்களிடமிருந்து 10% அளவுக்கு உற்பத்தி பொருட்களை தமிழக அரசு கொள்முதல் செய்திட அரசாணை பிறப்பிக்க வேண்டும் என இந்த மாநாடு தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கிறது.

6. வியாபாரிகள் கடை நடத்த பல்வேறு உரிமங்கள் அனுமதிகள் பெற வேண்டியுள்ளதை மாற்றி, ஒரே உரிமத்தில் 5 ஆண்டுகள் செல்லத்தக்க வகையில் உரிமங்களை வழங்க அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மேலும், உரிமங்களை பெறுவதற்கான நடைமுறைகளை எளிமைப்படுத்த வேண்டும். மேலும், வணிகர்கள் உரிமம் வாங்குவதில் பல்வேறு சிக்கல்கள் வருவதை தடுக்கும் பொருட்டும், ஊழல்கள் மற்றும் லஞ்சம் தவிர்ப்பதற்கான நடவடிக்கையாகவும், தமிழக அரசு ஒற்றைச்சாளர முறையில் வணிகர்களுக்கான உரிமம் வழங்கும் நடைமுறையை அமல்படுத்த வேண்டும் எனவும் இந்த மாநாடு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

7. சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை அமைப்பை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு உலகம் முழுவதும் பிளாஸ்டிக் பயன்பாடுகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒருபகுதியாக இந்தியாவில் முதலில் 75 மைக்ரான்களுக்கும் பின்னர் 120 மைக்ரான்களுக்கும் குறைவான பிளாஸ்டிக்களுக்கு தடை விதிக்கப்பட்டது. அதன்பின்னர் 100 மைக்ரான்களுக்கும் குறைவாக இருக்கிற பிளாஸ்டிக்கள் அனைத்திற்கும் தடை விதிக்கப்பட்டது. இப்படி விதிமுறைகளை ஒன்றிய, மாநில அரசுகள் அடிக்கடி மாற்றி அறிவிப்பதால் இதை உற்பத்தி செய்கிற, கொள்முதல் செய்கின்ற வியாபாரிகள் பெருமளவில் பாதிக்கப்படுகிறார்கள். மேலும், ஆய்வுக்கு வருகின்ற அதிகாரிகள் எவ்வித முறையான சோதனைகளுமின்றி கண்மூடித்தனமாக பிளாஸ்டிக் பொருட்களை கைப்பற்றி செல்வதில் கவனம் செலுத்துகின்றனர். இதன்போது வியாபாரிகளை குற்றவாளிகள் போல அதிகாரிகள் நடத்துகின்றனர். சிறுகுறு வியாபாரிகளே இதுபோன்ற நெருக்கடி நடவடிக்கைகளுக்கு ஆளாகின்றனர். எனவே மத்திய, மாநில அரசுகள் ஒரு தெளிவான ஒரு பயன்பாட்டு அறிக்கையை தருவதோடு, ஆய்வு செய்ய வருகிற அதிகாரிகளுக்கு முறையான தொழில்நுட்ப அறிவை கொடுத்து வியாபாரிகள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அதிகாரிகளின் ஏதேச்சதிகார போக்கை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த மாநாடு வலியுறுத்துகின்றது.

8. தமிழகம் முழுவதும் சமீபகாலமாக வியாபார நிறுவனங்களை மிரட்டி பணம் பறிக்கும் சமூகவிரோத கூட்டம் ஆங்காங்கே தலை தூக்கி வருகின்றது. கடன் வாங்கி மிகுந்த சிரமங்களுக்கிடையில் வியாபாரம் செய்து கொண்டிருக்கிற சராசரி வியாபாரிகள் இதுபோன்று மாமூல் கேட்கின்ற கட்டப்பஞ்சாயத்து செய்கிற சமூக விரோத கும்பலால் பெருமளவு பாதிக்கப்படுகிறார்கள். பல வியாபாரிகள் இதனால் தொழிலை விட்டுவிட்டு இடம் பெயரும் சூழ்நிலைக்கும் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். தமிழகத்தின் வளர்ச்சிக்கும் எதிர்காலத்திற்கும் இது நல்லதல்ல என்பதால், அரசு உடனடியாக தமிழகம் முழுவதும் இதுபோன்ற அத்துமீறிய செயல்களை காவல்துறை மூலம் இரும்புக் கரம் கொண்டு கட்டுப்படுத்தி, தகுந்த பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டுமென இந்த மாநாடு கேட்டுக் கொள்கிறது.

9. மக்களின் அத்தியாவசிய தேவையான அரிசி உள்ளிட்ட பொருட்களை
5% ஜி.எஸ்.டி. வரி வரம்புக்குள் கொண்டு வந்து பொதுமக்களையும் சிறு குறு வணிகர்களையும் சிரமத்திற்கு உள்ளாக்கி இருக்கிறது ஒன்றிய பாஜக அரசு. இந்தியாவைப் பொறுத்தவரை அரிசி நுகர்வில் தென் மாநிலங்கள் குறிப்பாக தமிழ்நாடு அதிக அளவில் அரிசி உணவை பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. எனவே அரிசியின் மீதான இந்த வரி விதிப்பு தமிழக மக்களின் மீது தொடுக்கப்பட்டிருக்கிற அரசியல் தாக்குதலாகும். ஆகவே, உடனடியாக அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் மீது விதிக்கப்பட்டிருக்கிற 5 சதவீத வரியை ரத்து செய்ய வேண்டும் என இந்த மாநாடு கேட்டுக்கொள்கிறது.
10. தங்க நகைகளில் ஹெச்.யூ.ஐ.டி., எனப்படும் 6 இலக்க ‘ஹால்மார்க் தனித்துவ அடையாள எண்கள்’ பி.ஐ.எஸ். லோகோ இல்லாமல் விற்கக் கூடாது என்று பி.ஐ.எஸ்., எனப்படும் இந்திய தர நிர்ணய ஆணையம் சமீபத்தில் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த நடைமுறை மே 01 முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறையில் சில சிக்கல்களை நகை வியாபாரிகள் எதிர்கொள்ள நேரிடுகிறது. உதாரணமாக கொள்முதல் செய்த தங்கப் பொருட்களை ரிட்டன் செய்ய வேண்டியது வந்தால் என்ன செய்ய வேண்டும்?

டேமேஜான நகைகளை எப்படி ரிட்டன் செய்ய வேண்டும்? ஜோடி நகைகளுக்கு எப்படி ஹெச்.யூ.ஐ.டி. எண் வழங்கப்படும்? என்பன போன்ற கேள்விகளுக்கு தெளிவான விளக்கங்கள் இல்லை. அதிகாரிகளை அணுகினாலும் இதற்கு முறையான தெளிவான பதில் இல்லை. அவர்களிடமும் ஒரு தெளிவற்ற நிலைதான் உள்ளது. ஆகவே, அரசு ஒரு சட்ட விதியை ஏற்படுத்தும்போது, அதன் சாதக, பாதகங்களை அலசி ஆராய்ந்து, தெளிவுபடுத்தி நடைமுறைப்படுத்த வேண்டும் என இம்மாநாடு கேட்டுக் கொள்வதோடு, நகை வியாபாரிகள் சங்கங்களின் பிரதிநிதிகளோடு பேசி, மேற்படி ஹெச்.யூ.ஐ.டி. எண் சார்ந்த குழப்பங்களை தீர்த்து, வியாபாரிகளின் சிரமங்களை போக்க வேண்டும் என இந்த மாநாடு கேட்டுக்கொள்கிறது.

- Advertisement -

- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்