சுற்றுலா வாகனத்திற்கு கூடுதலாக வாடகை கேட்டதால் இரு தரப்பினர்களுக்கு இடையே மோதல்
நாகை அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதி
நாகை அருகே சுற்றுலா வாகனத்திற்கு கூடுதலாக வாடகை கேட்டதால் இரு தரப்பினர் பயங்கர ஆயுதங்களுடன் தாக்கிக் கொண்டதில், இரண்டு பெண்கள் உள்ளிட்ட 7 பேர் படுகாயங்களுடன் நாகை அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதி.
சென்னை கொளத்தூரை சேர்ந்த ஹரிஹரன் என்பவர் தனது உறவினர்கள் 10 பேருடன் ஏலக்குறிச்சி அடைக்கல மாதா கோவில்,பூண்டி மாதா கோவில் உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா சென்று விட்டு இறுதியாக உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலயத்திற்கு வருகை தந்துள்ளனர், அப்பொழுது சுற்றுலா வேனிற்கு பாண்டிச்சேரி பர்மிட் இல்லை என ஓட்டுனர் அசோக்குமார் கூறியுள்ளார். அதற்கு 2000 ரூபாய் கூடுதலாக கட்டணம் கொடுக்க வேண்டும் என கேட்டுள்ளார். 20 ஆயிரம் ரூபாய் மட்டுமே வாடகை பேசியதாலும் கூடுதலாக கட்டணம் தர முடியாது என ஹரிஹரன் தரப்பினர் கூறியுள்ளனர். இதை அடுத்து ஓட்டுனர் தனது வேன் உரிமையாளரிடம், வேளாங்கண்ணி கார் ஓட்டுனர்கள் சங்கத்திடம் கூறியுள்ளார். இதை அடுத்து ஹரிஹரன் தங்கியுள்ள விடுதிக்கு சென்று 2000 ரூபாய் கூடுதலாக கொடுக்க வேண்டும் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர், அப்போது ஹரிஹரன் தரப்பினர் கார் ஓட்டுனர்களை தாக்கியதாக கூறப்படுகிறது, இதை தொடர்ந்து சுமார் 20 பேர் கொண்ட கார் ஓட்டுநர்கள் வந்து ஹரிஹரன் தரப்பினரை கடுமையாக தாக்கியுள்ளனர். இரண்டு தரப்பிலும் தாக்கிக் கொண்டதில், இரண்டு பெண்கள் உள்ளிட்ட, இரண்டு தரப்பிலும் 7பேருக்கு காயம் ஏற்பட்ட நிலையில், உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வேளாங்கண்ணி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காவல் துணை கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களை பார்வையிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.